உங்க சம்பளம் குறைவா இருந்தாலும்.. பணக்காரர்களின் இந்த ரகசியத்தை ஃபாலோ பண்ணுங்க.. சீக்கிரம் பணக்காரராகலாம்..

Financial Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே பிரச்சனையில்லாத நிம்மதியான வாழ்க்கையையே வாழ விரும்புகிறோம். அதற்கு பணம் மிகவும் முக்கியம். இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக தினமும் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். அதே வேளையில் ஒருபுறம் காய்கறிகள், மளிகை சாமான்கள் போன்றவற்றின் விலைவாசிகள் அதிகரித்தவாறு இருக்கின்றன. ஆனால் வாங்கும் சம்பளத்தில் எவ்வித உயர்வும் ஏற்படுவதில்லை. இதன் காரணமாக நிறைய பேரால் பணத்தை சேமிக்க முடிவதில்லை. ஆனால் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப திட்டமிட்டு பணத்தை செலவழித்தால், சேமிப்பை அதிகரிக்க முடியும்.

சேமிக்கும் பழக்கமானது மிகவும் நல்ல பழக்கம். இப்படி பணத்தை சேமித்து வைப்பதன் மூலம், அது ஒருவரின் எதிர்காலத்தை பாதுகாக்கும். அதோடு பணத்தை சேமிப்பதன் மூலம், அவரச தேவையின் போது கடன் வாங்காமல் சமாளிக்கலாம். நிறைய சம்பளம் வாங்குபவர்களால் மட்டும் தான் பணத்தை சேமிக்க முடியும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குறைவாக சம்பளம் வாங்கினாலும் அதிக பணத்தை சேமிக்க சில வழிகள் உள்ளன. இந்த வழிகளை பல கோடீஸ்வரர்களும் பின்பற்றியுள்ளார்கள். இப்போது அந்த வழிகள் என்னவென்பதைக் காண்போம்.

Millionaires Secret Adopt These Methods To Save Big Even If Your Salary Is Low

பட்ஜெட்டை தயார் செய்யவும்

பணத்தை சேமிக்க வேண்டுமானால் ஒருவர் பட்ஜெட் போட்டு செலவழிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இப்படி பட்ஜெட் போடுவதன் மூலம், நமது தேவையில்லாத செலவுகள் நன்கு தெரியும். இதைக் கொண்டு அந்த தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, முக்கிய செலவுகளை மட்டும் செய்யலாம். இதன் மூலம் தேவையற்ற செலவுகளுக்கு வீணடிக்கப்படும் பணத்தை சேமித்து வைக்க முடியும்.

தற்போது நிறைய பேருக்கு அகவுண்ட்டில் சம்பளம் வருகிறது. இதனால் பலர் தங்களின் செலவுகளை அகவுண்ட் சம்மரியின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று கையில் பணத்தை எடுக்காமல் அப்படியே செலவழிப்பார்கள். பின் அனைத்து செலவுகளும் முடிந்து மாத இறுதியில் மீந்து போகும் பணத்தை அப்படியே சேமிப்பில் போடுகிறார்கள். ஆனால் இப்படியான பழக்கம் இருந்தால், சில சமயங்களில் அகவுண்டில் பணம் இருக்கும் வரை செலவு செய்ய நிறைய வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் பணத்தை பட்ஜெட் போட்டு தேவையான பணத்தை மட்டும் கையில் எடுத்து, அதைக் கொண்டு முடிந்தவரை சமாளிக்க முயற்சிக்க வேண்டும்.

அவசர தேவைக்காக பணத்தை ஒதுக்கவும்

மாத பட்ஜெட் தயாரிக்கும் போது, எப்போது அவசர தேவைகளுக்காகவும் சிறிது பணத்தை ஒதுக்குங்கள். இப்படி ஒதுக்கும் பணத்தில் அவசரத்தைத் தவிர, தேவையில்லாமல் கையை வைக்காதீர்கள். ஏனெனில் அவசர நிதியை ஒதுக்குவது என்பது மிகவும் முக்கியம். இப்படியான நிதி எதிர்பாராமல் வரும் செலவுகளை எளிதில் சமாளிக்க உதவி புரியும். முக்கியமாக குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவசர கால நிதியை கட்டாயம் ஒதுக்க வேண்டும்.

சம்பள உயர்வு மற்றும் போனஸ் பணத்தை தொடாதீர்

உங்களின் வருமானத்தில் உயர்வு ஏற்பட்டாலோ அல்லது பணியிடத்தில் போனஸ் பணத்தை பெற்றாலோ, உடனே அவற்றை செலவழிக்க திட்டம் தீட்டாமல், அவற்றை அப்படியே சேமித்து வையுங்கள். இப்படி செய்வதனால் உங்களின் இலக்குகளை எளிதில் அடையலாம்.

தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவும்

பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒன்று தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது தான். இது கடினமான ஒன்றாக இருந்தாலும், இப்பழக்கம் ஒருவரது நிதி நிலையை வலுவடைய உதவி புரியும். தேவையற்ற செலவுகள் என்றால் என்ன என்று கேட்கலாம். அதிகம் வெளியே சாப்பிடுவது, தேவையில்லாமல் புதிய ஆடைகளை வாங்குவது, பிடித்த பொருட்கள் அல்லது தேவையில்லாத பொருட்களை பார்த்த உடனே வாங்கிவிடுவது போன்றவை இதில் அடங்கும்.

சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம்

பணத்தை அதிகம் சேமிக்க நினைப்பவர்கள், முதலில் சேமிப்புடன் அதை அதிகரிப்பதற்கான வழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். எப்போதும் உங்களின் வங்கி கணக்கில் அதிக பணத்தை வைத்திருக்காமல், எஃப் டி, பங்குச் சந்தை போன்றவற்றில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடுகளை செய்யுங்கள். அதோடு தபால் நிலையங்களில் நல்ல வட்டியைத் தரும் பல சிறுசேமிப்பு திட்டங்களும் உள்ளன. அவற்றை விசாரித்தும் அவற்றில் முதலீடு செய்யலாம்.

சிறிய அளவு சேமிப்பில் தொடங்குங்கள்

சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழிக்கேற்ப, முதலில் சிறிய அளவில் பணத்தை சேமிக்க தொடங்குங்கள். உதாரணமாக, மாதம் ரூ.2,000 மட்டும் சேமித்து வந்தால், ஒரு ஆண்டிற்கு ரூ.24,000 சேர்ந்திருக்கும். 4 ஆண்டுகளில், வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக பணம் சேர்ந்திருக்கும். இந்த பணம் அவசர காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மன அழுத்தத்தை தவிர்க்கவும்

ஒருவர் மன அழுத்தம் கொள்ளும் போது, அது அந்நபரின் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமின்றி, குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கவும் செய்யும். மேலும் அதிக மன அழுத்தத்தின் போது அதைத் தணிக்க, சிலர் கண்டதை வாங்கி சாப்பிடுவார்கள், இன்னும் சிலர் மனதிற்கு பிடித்ததை வாங்கி ஷாப்பிங் செல்வார்கள். இப்படியான தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion