இந்த விளையாட்டெல்லாம் சின்ன வயசுல விளையாடி இருக்கீங்களா?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

சற்றேறக்குறைய முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, பழந்தமிழர் கலைகள், விளையாட்டுகள் யாவும் உயிர்ப்புடன் இருந்துவந்தன. ஆண்டுகள் போகப்போக, புதிது புதிதாக வந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகளாக மக்களின் பயன்பாட்டுக்கு வந்தபின்னர், தமிழரின் பாரம்பரியமான பயன்பாடுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக, வழக்கொழிந்து போயின.

அக்காலங்களில் கிராமங்கள் என்றில்லாமல் நகரங்களிலும் தொன்மையான விளையாட்டுகளே, சிறுவர் சிறுமியருக்கு உள்ள பொழுதுபோக்காக இருந்து வந்தது, பள்ளிகளில் விடுமுறை நாட்கள் வந்துவிட்டாலோ, ஊரிலிருந்து உறவுப்பிள்ளைகள் வந்துவிட்டாலோ, வீடு ஒரே உற்சாகக் கொண்டாட்டத்துடன் திகழும், அந்த உற்சாகத்துடன், பிள்ளைகள் வெளியில் சென்று விளையாட விரும்ப, பெற்றோரும் அனுமதித்து விடுவர்.

Ever green traditional games that are unforgettable childhood memories for us

அப்படி சிறுவர் சிறுமியர் பெற்றோர் ஆதரவுடன் விளையாடிய விளையாட்டுக்கள் பல இருந்தாலும், அக்காலத்தில் குழந்தைகளிடையே பிரபலமாக விளங்கியவை, பெண்களின் விளையாட்டான பல்லாங்குழி, தாயக்கட்டை, நொண்டி ஆட்டம், சில்லு ஆட்டம் போன்றவையும், சிறுவர்களுக்கு, கிட்டிப்புல், கோலி, பம்பரம், கபடி போன்ற விளையாட்டுகள் முக்கியமாக இருந்தன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல்லாங்குழி விளையாட்டு :

பல்லாங்குழி விளையாட்டு :

மரத்தால் ஆன ஏழு குழிகள் கொண்ட இரண்டு இணைப்பலகைகள் கொண்ட பல்லாங்குழி. முற்காலத்தில் திருமண சீர்வரிசையில் பெண் வீட்டார் பெண்ணுடன் அனுப்பும் பொருட்களில் முக்கியமானது, இந்த பல்லாங்குழி. அக்காலத்தில் வீட்டில் உள்ள திருமணமாகாத பெண்கள், பிரசவத்திற்கு காத்திருக்கும் தாய்மார்கள் எல்லாம் விளையாடும் ஒரு உற்சாகமான விளையாட்டு.

எப்படி விளையாட வேண்டும்?

இரண்டு பேர் விளையாடக்கூடிய பல்லாங்குழியில் ஒவ்வொரு குழியிலும் ஐந்து புளியங்கொட்டைகளை இட வேண்டும், மொத்தம் எழுபது காய்கள். ஒருவர் போட்டியைத் தொடங்க வேண்டும், அவர் பக்கம் உள்ள குழியில் இருந்து காய்களை எடுத்து, ஒவ்வொன்றாக அடுத்தடுத்த குழிகளில் போட்டு வரவேண்டும், இப்படியே தொடர வேண்டும், கைகளில் உள்ள காய்கள் தீரும்போது, அடுத்து வெறும் குழி வருமாயின், அதற்கு அடுத்த குழியில் உள்ள காய்கள் அனைத்தும், அவருக்கே சொந்தம்.

இதன் மூலம் இருவரில் ஒருவரே, வெற்றியாளராக முடியும், மற்றவரின் கையில் ஒரு குழிக்கு தேவையான ஐந்து காய்கள் இல்லாத நிலையிலும், ஒரு காயை குழியில் போட்டு, அவரிடம் உள்ள அந்த ஓரிரு காய்களும் தீரும்வரை ஆட்டம் தொடரும், இதை கிராமங்களில் கஞ்சி காய்ச்சுதல் என்பர், இதுபோல விளையாடிவர, கையில் அதிகம் காய்கள் இருக்கின்றவரே, வெற்றியாளர் ஆவார்.

நொண்டி ஆட்டம் :

நொண்டி ஆட்டம் :

சிறுவர், சிறுமியரை உற்சாகம் கொள்ள வைக்கும் விளையாட்டு, உடலோடு மனதுக்கும் ஊக்கம் தரும் ஒரு விளையாட்டு, இந்த நொண்டி ஆட்டம்.

ஒரு சிறிய வட்டம் வரைந்து, அதில் ஒருவர் நின்றுகொண்டு விளையாட்டைத் தொடங்குவார், ஒரு காலை மடக்கி, நொண்டியடித்து ஒடி, அங்கே சுற்றி ஓடிக்கொண்டிருக்கும், மற்ற பிள்ளைகளைத் தொட வேண்டும், தொட்டுவிட்டால், அவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேறுவர், ஆயினும், நொண்டியடிப்பவர் குறிப்பிட்ட வட்டத்தில் காலை ஊன்றாமல், வெளியில் காலை ஊன்றிவிட்டால், ஏற்கெனவே வெளியேறியவர் மீண்டும் வந்து ஆட்டத்தில் இணைந்து கொள்வார், அனைவரையும் ஆட்டமிழக்க செய்பவரே, வெற்றியாளர்.

நன்மைகள் :

நன்மைகள் :

இந்த ஆட்டத்தை குழுவாகவும் விளையாடலாம், இந்த ஆட்டத்தின் வேறு வடிவமே, பள்ளிகளில் கோகோ எனும் குழு விளையாட்டாக விளையாடப்பட்டது.

இந்த நொண்டி ஆட்டம், கால்களை மடக்கி ஒடி விளையாடுவதால், குழந்தைகளின் இரத்த ஓட்டம் அதிகரித்து, விளையாட்டில் அடையும் வெற்றிகளால் மனம் புத்துணர்வும் அடைகிறது. தோற்றாலும் வெல்ல வாய்ப்புகள் இருப்பதால், குழந்தைகள் யாவரும் மகிழ்வோடு விளையாடும்போது, அவர்களின் உடலும் மனமும் இலகுவாகி, உடலின் ஆற்றல் மேம்படுகிறது. சோம்பல் நீங்கி, சுறுசுறுப்பு உண்டாகிறது

சில்லு விளையாட்டு.

சில்லு விளையாட்டு.

பெற்றோருடன் சிறுவர்கள் சிறுமியர், நீர்நிலைகளில் குளிக்கச்செல்கையில், அவர்களுக்குத் தெரியாமல், சில்லு எனும் மண் பாண்டங்களின் ஓட்டை நிறைய கைகளில் வைத்திருப்பார்கள்.

பெற்றோர் துணி துவைக்கும் போதோ, மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போதோ, கைகளில் உள்ள சில்லுகளை, நீருக்கு மேலே இலாவகமாக, நீரைச் செதுக்கியதுபோல, குறி பார்த்து வீசுவர், அந்த சில்லுகளும் அழகாக, நீரில் மீன்களைப்போல மூன்று நான்கு இடங்களில் நீரைக் கிழித்துக் கொண்டு, சென்று மறையும். இதைக்கண்டு குழந்தைகள், தங்களின் திறமையை தங்களுக்குள் இரகசிய சிரிப்புடன் பகிர்ந்துகொள்வர், இதைக்கண்டும் காணாமல் இருக்கும் பெற்றோரும், குழந்தைகளின் இச்செயலை இரசிக்கவே செய்வர்.

குழந்தைகளின் இத்தகைய குறும்புகள், சமயத்தில் சற்றே விபரீதமாகிவிடும், இவர்கள் இதுபோல சில்லு விடும் வேளையில், அங்கு நீர்நிலைகளின் நடுவே சென்று குளிக்கும் பெரியவர்கள் மூழ்கி எழும் சமயத்தில், அவர்களை உரசிச் செல்லும் சில்லுகள், அவர்களை ஒரு வினாடி அதிர்ச்சியடைய வைத்து விடும். பிறகு சூழ்நிலையை உணர்ந்து கரையில் நிற்கும் சிறுவர்களை கோபத்துடன் பார்ப்பர், ஆயினும் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாத சிறுவர்கள், சில்லுகளை எல்லாம் தூர வீசிவிட்டு, நல்ல பிள்ளைகள் போல, கரையில் நின்று குளிப்பர். இது போன்ற சில்லே, வீடுகளின் முன்புறம் சிறுமியர் அதிகம் விளையாடும் ஒரு விளையாட்டில், முக்கிய இடம் பிடிக்கிறது.

நான்கைந்து கட்டங்கள் சில்லினால் தரையில் கீறி, அதன் மேல் மலை என்று சொல்லக்கூடிய தலைவாசல் பகுதியை உண்டாக்கி, ஆட்டத்தை தொடங்க வேண்டும், சில்லை ஒவ்வொரு கட்டமாக எறிந்து, நொண்டியடித்து, சில்லை மிதித்து, மேலே உள்ள கட்டத்தில் வீசி, அதை ஒரே தாவில் மிதித்து, இதுபோல அனைத்து கட்டங்களையும் முடிக்கும் வரை விளையாடலாம்.

ஆயினும் கட்டத்தில் எறியும் சில்லு, கட்டங்களின் இடையே உள்ள கோட்டில் பட்டால், அது தவறு என்று கருதப்பட்டு, அடுத்தவர் ஆட வருவார். இப்படி செல்லும் ஆட்டம், எல்லா கட்டங்களையும் வெற்றிகரமாக முடித்ததும், கண்களை மூடிக்கொண்டு சில்லை தலையில் வைத்துக்கொண்டு, கட்டங்களைத் தாண்ட வேண்டும், இதில் வெற்றி பெறுபவர், மலையில் நின்றுகொண்டு, சில்லை மற்றவர்களின் விருப்பப்படி வீசி, அதை கட்டங்களைத் தாண்டி மிதித்துவிட்டால்; அவருக்கு ஒரு வீடு சொந்தமாகிவிடும்.

இந்த கட்டங்களின் வெளியே, அவருக்கு ஒரு வீடு அவரே, கட்டம் கட்டி வைத்துக்கொள்ளலாம், அவர் மீண்டும் நொண்டியடித்து கட்டங்களை கடக்க நேர்கையில், இந்த வீடுகளில் கால்களை வைத்து, ஓய்வெடுத்துக்கொள்ளலாம்.

 கிட்டிப்புல்.

கிட்டிப்புல்.

அடிக்கும் வெயில், சிறுவர்களின் தலையில் விழுந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், பள்ளி விடுமுறை நாட்களில், அனைவரும் பாக்கெட்டில் வைத்திருக்கும் கிட்டிப்புல்லை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள திடல்களிலோ அல்லது கோவில்களின் வாயிலிலோ கிட்டிப்புல் விளையாடுவர். அபாயகரமான கூரான முனைகள் கொண்டிருப்பதால், வீட்டின் அருகே, மக்கள் கூடும் இடங்களில் கிட்டிப்புல் விளையாட பெரியவர்கள் அனுமதிப்பது இல்லை.

மைதானங்கள் அல்லது திடல்களில், சிறுவர்கள் நான்கைந்து பேர் நின்றுகொண்டு, ஒருவர் தரையில் சிறிது மண்ணை பறித்து, அதில் இருபக்கமும் கூரான புல் எனும் சிறிய மரக்கட்டையை கிட்டி எனும் நீண்ட கட்டையால் தூக்கி அடிக்க வேண்டும், எதிர்புறம் மற்ற சிறுவர்கள் நிற்பார்கள், அவர்கள் இந்த புல்லை பிடித்துவிட்டால், அடிப்பவர் ஆட்டம் இழந்து, மற்றவர் ஆட வருவர். யாரும் பிடிக்கவில்லை என்றால் ஆட்டம் தொடரும்.

கிராமத்து சிறுவர்களுக்கு பிடித்த விளையாட்டாக திகழ்கிறது, கிட்டிப் புல். சிறுவர்களின் உடல் வலிமையை, கூர்ந்து கவனிக்கும் ஆற்றலை மேம்படச் செய்ய உதவும் ஒரு விளையாட்டாக, கிட்டிப் புல் திகழ்கிறது.

கலர் கலர் பம்பரம், உடைந்தால் களேபரம்!

கலர் கலர் பம்பரம், உடைந்தால் களேபரம்!

சிறுவர்களுக்கு உடலில் வலுவும், முழு உடலுக்கும் பயிற்சி தருவதுமான ஒரு விளையாட்டென்றால், அது பம்பரம் தான்.

சிறுவர்கள் கால் சட்டை பையில் அக்காலங்களில் எது இருக்கிறதோ இல்லையோ ஒரு பம்பரமும், அதன் கயிறும் நிச்சயம் இருக்கும், இதனால், சக மாணவர்களால் ஆசிரியர்களிடம் காட்டிக் கொடுக்கப்படும்போது, ஆசிரியர், கோபத்துடன் பார்க்க, இவர்கள் ஆசிரியரிடம், சார், சாயங்காலம் போகும் வழியில் பார்க்கில் விளையாடலாம், மறக்காமல் எடுத்து வா என்று இவன்தான் சொன்னான் சார் எனும்போது, சொன்னவன் இந்த எதிர்பாராத தாக்குதலில், நிலைகுலைந்து போவான்,

ஆசிரியரும் இதைக் கடந்து வந்தவர்தானே, அவர் கோபமாக திட்டுவது போல, சரி சரி, இனி ஒரு முறை பார்த்தேன், எல்லா பயல்களையும் வெயிலில் முட்டி போட வைத்து விடுவேன் என்று பாவ்லா காட்டுவார்.

சிறுவர்களை மயக்கும் இந்த பம்பர விளையாட்டை எப்படி ஆடுவது?

கடைகளில் பம்பரங்கள், நூலுடன் கிடைக்கும், ஆயினும், பம்பரம் வாங்க சில தொழில் இரகசியங்கள் வைத்திருப்பர் சிறுவர்கள். அடி விழுந்தால் தாங்குமா என்று பார்த்து, வைரம் பாய்ந்த கட்டையால் செய்த பம்பரத்தை வாங்குவர், பின்னர் பம்பரத்தில் உள்ள பொடி ஆணியைப் பிடுங்கி எறிந்துவிட்டு, நல்ல வலுவான, வளையாத, ஆணியை பம்பரத்தின் அடியில் அடித்து செருகுவர். பின்னர், இந்த பம்பரத்தில் உள்ள ஆணியை பாறாங்கல்லில் தேய்த்து, நன்கு கூர் தீட்டுவர்.

இதன் பின் பம்பர கயிறை கடைகளில் அலசி, எந்த கடையில் நல்ல கயிறு கிடைக்கிறதோ, அதை வாங்கி, அதன் ஒரு நுனியில் சோடா மூடியை நடுவில் ஓட்டை இட்டு, அதன் வழியே, கயிற்றை செருகி, முடிச்சிட்டு வைத்துக் கொள்வர், மறுமுனை, பம்பரத்தில் ஆணியைச் சுற்றி சுற்றும் கயிற்றின் ஆரம்பமாக அமையும். இந்த நுனியில் சிறுவர்கள், பம்பரம் வேகமாக சுழல வேண்டி, இரகசியமான முறையில் கயிற்றை சுற்றுவர்.

தரையில் ஒரு வட்டம் அமைக்கப்பட்டு, அதில் அனைவரும் ஒரே நேரத்தில் பம்பரங்களை சுற்றச்செய்து, தங்கள் கயிற்றால் அந்த பம்பரங்களை கைகளில் சுழலவிட்டுப் பிடிக்க வேண்டும், பிடிக்க முடியாதவர்களும், பம்பரத்தை ஆரம்பத்திலேயே, வட்டத்தின் வெளியே விட்டவர்களும், தங்கள் பம்பரத்தை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும்.

மற்ற சிறுவர்கள் உள்ளே உள்ள பம்பரத்தை, தங்கள் பம்பரத்தை சுற்றி, வெளியே தள்ள வேண்டும். இந்த சமயங்களில், தங்கள் பம்பரத்தின் கூரான ஆணி மூலம், உள்ளே உள்ள பம்பரத்தை, இரண்டாகப் பிளப்பது சிறுவர்களின் ஆர்வமாக இருக்கும், இதற்காகவே, நல்ல வைரம் பாய்ந்த மரத்தால் ஆன பம்பரங்களை தேடி வாங்குவர்.

ஆயினும், உடைந்த பம்பரத்தை உடைய சிறுவர்கள், வீட்டில் அடிப்பார்கள் என்று அழுதுகொண்டே செல்வது, பார்ப்பதற்கு, வருத்தமாக இருக்கும். மேலும் தோற்ற சிறுவர்களின் பம்பரமும், போரில் விழுப்புண் பெற்ற போர் வீரர்போல, பம்பரமெங்கும், ஆணிகள் குத்திய வடுக்களாக காணப்படும்.

கோலி விளையாட்டு ;

கோலி விளையாட்டு ;

சிறுவர்களை சேமிப்பில் ஆர்வம் கொண்டவர்களாக மாற்ற வல்லது, கோலி விளையாட்டு, இதில் பங்குதாரர்கள் வைத்துக்கொண்டு, ஒருவர் மற்றவர் கோலிகளை அடிக்காமல், ஆட்டத்தின் இறுதியில், பங்கு பிரித்து கொள்வர்.

பளிங்கு அல்லது கோலி எனப்படும் இந்த விளையாட்டில் வலுவான கை விரல்களும், குறியை நோக்கும் கண்களுமே, பிரதானம். ஒரு வட்டத்தை வரைந்து அதில் அனைவரின் கோலிகளை இட்டு, அதன் இரு புறமும் ஆறடி தள்ளி ஒரு கோடு வரைந்து, அதில் இருந்து, அடுத்த பக்கத்து கோட்டுக்கு அருகில் கோலியை எறிந்தவனே, வட்டத்தில் உள்ள கோலிகளை அடிக்க முடியும்.

அடித்தபின் வெளியே வரும் கோலிகள் எல்லாம் அவனுக்கே சொந்தம், மேலும், வட்டத்தில் உள்ள மற்ற கோலிகளையும் அவர்கள் அடித்து, அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளலாம். மற்ற வகை ஆட்டத்தில், கோலி அடிப்பவர்கள், மற்றவர்கள் கூறும் கோலிகளை அடிக்க வேண்டும், அடித்தால், கோலிகளை பெறுவார்.

இந்த விளையாட்டில் கோலிகளை அடிக்க, அளவில் பெரிய முரட்டு கோலிகள் முதல், பூ போட்ட கோலி, ப்ளெயின் கோலி, இரும்பு கோலிகள் என்று பல வகை இருக்கும், ஆயினும், இதுவும், பம்பரம் விளையாட்டு போலத்தான்,

பெரிய கோலிகளால் அடிக்கும்போது, சிறிய கோலிகள் உடையும், மேலும், வெற்றி பெற்றவர்கள் மற்றவர்களின் கோலிகளை எடுத்துக்கொள்வர், இதனால் தோற்ற சிறுவர்கள், ஆசையாக வைத்திருந்த கோலிகளை இழந்து வெறுங்கையுடன், அழுதுகொண்டே வீடு திரும்புவர்.

தாய விளையாட்டு.

தாய விளையாட்டு.

தரையில் ஐந்துக்கு ஐந்து என்ற அளவில் கட்டங்களை வரைந்து கொள்ள வேண்டும், நான்கு புறங்களில் நமது ஓரம் உள்ள நடுக்கட்டத்தை, நம் துவக்க கட்டத்தை, ஒரு பெருக்கல் குறியிடவேண்டும். இதேபோல எதிர் முனையிலும், பக்கவாட்டு கட்டங்களின் நடுவிலும் செய்து, நடுவில் மலை அல்லது பழம் என்று குறிக்க வேண்டும்.

தாயத்தை நான்கு பேர் அல்லது இருவர் விளையாடலாம், ஒவ்வொருவருக்கும், நான்கு காய்கள், அவற்றை வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் வைத்துக்கொள்ள, காய்களின் இருப்பிடத்தை அறிய வசதியாக இருக்கும்.

தாய விளையாட்டை விளையாட, தாயக்கட்டைகள் அல்லது சோழிகள் தேவை,

தாயக்கட்டைகள் என்பது கட்டையிலோ அல்லது பித்தளையிலோ செய்யப்பட்டிருக்கும், சதுர வடிவில் உள்ள ஒவ்வொரு தாயத்திலும், உள்ள நான்கு பக்கங்களில், ஒரு புள்ளி, இரு புள்ளி, மூன்று புள்ளி, மற்றும் புள்ளிகள் இல்லாத பக்கம் இருக்கும்,

தாயம் உருட்டும்போது, இதில் ஒரு புள்ளி, மற்றதில் புள்ளி இல்லாமல் வந்தால் அது தாயம் எனப்படும், இந்த தாயம் விழுந்தால்தான், ஆட்டத்தை தொடங்க முடியும்.

தாயக்கட்டைகளுக்கு பதில், சோழிகள் அல்லது புளியங்கொட்டைகளை பயன்படுத்தியும் விளையாடுவர். ஆறு சோழிகள் எடுத்து, அதன் திறந்த பக்கம் புள்ளியாகக் கணக்கிடப்படும், புளியங்கொட்டைகளின் ஒரு புறத்தை தரையில் தேய்த்து, அப்பகுதியை புள்ளியாக கணக்கில் கொள்வர்.

முதலில் ஆடுபவர், தாயம் போட்டவுடன், மற்ற புள்ளிகளின் அடிப்படையில், காய்களை வலமிருந்து நகர்த்த வேண்டும், எதிர்த்து விளையாடுபவரின் காய், நகர்த்தலில் உள்ள கட்டத்தில் இருந்தால், அவர்கள் காயை அந்த இடத்தில் வெட்ட வேண்டும், நகர்த்தலில், நம் காயை இடும் சதுரத்துக்கு முன் மற்றவரின் காய் இருந்தால், அந்த இடத்துக்கு நமது காயை நகர்த்த இயலாது, ஆட்டம், மற்றவருக்கு செல்லும்.

நாம் நடுவில் உள்ள மலையேற, மற்றவர்களின் காயை வெட்டியபின், மற்ற சதுரங்களைச் சுற்றி வந்து, அதன் பின்னர்தான் மலையேற முடியும். மலையில் இருந்து தாயம் இட, மலையேறிய காய்களை மீட்டெடுப்பவர், வெற்றியாளர் ஆவார்.

ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக தாயத்தை விளையாடினாலும், பொதுவாக, தாய கட்டங்கள் ஐந்துக்கு ஐந்து அல்லது ஏழுக்கு எழு என்ற கணக்கில் இருக்கும், சில இடங்களில் ஆருக்கு மூன்று என்ற அளவிலும் விளையாடுவர்.

மற்ற விளையாட்டுக்கள் :

மற்ற விளையாட்டுக்கள் :

இதுபோல, உடலுக்கும், மனதுக்கும் ஆற்றலை அளித்த கிச்சுகிச்சு தாம்பாளம், பச்சை குதிரை போன்ற ஏராளமான சிறுவர் விளையாட்டுகள் இன்று, நவீன காலத்தின் மாற்றங்களால், தற்கால சிறுவர்களுக்கு கிட்டாமல் போனாலும், பாரம்பரிய விளையாட்டுகள் இன்னும் அழிந்துவிடவில்லை.

அத்தி பூத்ததுபோல, இன்றும் சில கிராமங்கள், இந்த பாரம்பரிய விளையாட்டுகளை, வருங்கால சந்ததியினருக்கு கொண்டுசேர்க்கும் விதத்தில், தற்கால சிறுவர் சிறுமியர் விளையாடக் கற்றுக்கொடுத்து வருகின்றன, ஒரு நாள் மீண்டும் தமிழரின் பழம்பெருமையை மீட்டெடுப்போம், என்ற நம்பிக்கையில்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ever green traditional games that are unforgettable childhood memories for us

Ever green traditional games that are unforgettable childhood memories for us
Story first published: Sunday, October 22, 2017, 10:00 [IST]