IPL 2026: தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் சிஎஸ்கே வீரர்கள்! இதுல உங்களுக்கு பிடிச்சவங்க யாரு?

IPL 2026: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி தொடக்கவுள்ளது. இந்த தொடரின் முதல் நாளில் ஆர்சிபி அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதவுள்ளன.

5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டு சீசன்களாக மிகவும் மோசமாக விளையாடி, தமிழ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு சிஎஸ்கே ஒரு புதிய வீரரை அணியில் இறக்கியுள்ளது.

IPL 2026 Top CSK Players Who Became Fan Favorites Among Tamil Audience

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் எனும் சிஎஸ்கே தமிழ்நாட்டில் வெறும் ஒரு கிரிக்கெட் அணி மட்டுமல்ல-அது ஒரு உணர்வு. கடந்த பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் ஏராளமான வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தினால் மட்டுமின்றி, தமிழ் கலாச்சாரத்துடனான பிணைப்பு, நிலையான செயல்பாடு மற்றும் விசுவாசம் ஆகியவற்றின் மூலமும் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளனர். அப்படி இதுவரை தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற சில சிறந்த சிஎஸ்கே வீரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

1. MS தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் என்றதுமே முதலில் நினைவிற்கு வருவது தோனி தான். தமிழ் ரசிகர்களால் 'தல' என்று செல்லமாக அழைக்கப்படும் தோனி இல்லாமல் சிஎஸ்கே அணியை கற்பனை செய்வது என்பது கடினம். என்ன தான் தோனி ஒரு தமிழனாக இல்லாவிட்டாலும், அவரது அமைதியான தலைமைத்துவம், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைக்கும் திறன் மற்றும் சிஎஸ்கே மீதான அவரது விசுவாசம் ஆகியவை அவரை தமிழ் ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்படும் ஒரு நபராக ஆக்கியுள்ளது.

அதுவும் இவரது தனித்துவமான 'ஹெலிகாப்டர் ஷாட்கள்' மற்றும் நிதானமான கேப்டன்சி ஆகியவை சென்னை அணிக்கு பல ஐபிஎல் கோப்பைகளை வென்று தந்தன. முக்கியமாக இவரது எளிமையான இயல்பும், ரசிகர்களிடம் காட்டும் மரியாதையும், தமிழ் மக்களிடையே ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளன. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் பலர் தோனியை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கின்றனர். அந்த அளவில் தோனி தமிழ் ரசிகர்களின் மனதில் யாராலும் அழிக்க முடியாத ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.

2. சுரேஷ் ரெய்னா

சிஎஸ்கே ரசிகர்களால் 'சின்ன தல' என்று செல்லமாக அழைக்கப்பட்ட மற்றொரு வீரர் தான் சுரேஷ் ரெய்னா. இவரது அதிரடி பேட்டிங், மின்னல் வேக ஃபீல்டிங் மற்றும் அணியுடனான நீண்டகாலத் தொடர்பு ஆகியவை அவரை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறியப்படும் ஒரு பெயராக மாற்றின. முக்கியமாக இவர் ரசிகர்களுடன் நெருக்கத்தை அதிகரிக்க, சில தமிழ் வார்த்தைகளையும் கற்றுக் கொண்டார். இது தமிழ் ரசிகர்களிடையே அவரது பிணைப்பை வலுப்படுத்தியது.

3. ரவீந்திர ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகவும் நம்பகமான வீரர்களில் ஒருவர் தான் ரவீந்திர ஜடேஜா. பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சு என ஆல்-ரவுண்டரான இவர், களத்தில் இருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறனைக் கொண்டவர். ஜடேஜாவின் நிலையான ஆட்டமும், அணியின் வெற்றிக்கு அவர் அளித்த பங்களிப்புகளும், தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெறும் ஒரு வீராக உயர்த்தியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஜடேஜா சிஎஸ்கே அணியில் இல்லை. இது நிச்சயம் பல தமிழ் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

4. டுவைன் பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆற்றலையும், வெற்றியையும் தேடித் தரும் ஆட்டத்திறனைக் கொண்டவர் தான் பிராவோ. இவரது அதிரடியான ஆட்டம் மட்டுமின்றி, களத்தில் அவரது கலகலப்பான இயல்பும், தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து, மிகவும் பிடித்த வீரர்களுள் ஒருவராக்கியது. முக்கியமாக ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் இவரது பௌலிங் திறனும், முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனும் சிஎஸ்கே அணியின் பல வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. கிரிக்கெட்டைத் தாண்டி, சென்னை மீதான அவரது அன்பும், ரசிகர்களுடனான அவரது தொடர்ச்சியான உரையாடல்களும் அவரை தமிழ் ரசிகர்களால் விரும்பப்படும் வீரராக மாற்றின.

5. ஃபாஃப் டு பிளெசிஸ்

சிஎஸ்கே அணியில் இருந்த ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றவர்களைப் போல் வெளிப்படையாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் அவரது நிலையான ஆட்டம் சிஎஸ்கே அணிக்கு பல போட்டிகளில் பெற்று தந்த வெற்றியானது, அவரை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தவராக மாற்றியது. பொதுவாக தமிழ் ரசிகர்கள் அர்ப்பணிப்பைப் போற்றுவார்கள். பிளெசிஸின் அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடும் திறனும், உறுதிப்பாடும் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பெற்று தந்துள்ளது.

6. ருதுராஜ் கெய்க்வாட்

சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் தனது நேர்த்தியான பேட்டிங் பாணி மற்றும் அமைதியான மனோபாவத்தால் தமிழ் ரசிகர்களின் பிடித்தமான வீரர்களுள் ஒருவரானார். அதுவும் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்றதன் மூலம், ருதுராஜ் தனது நிலைத்தன்மையையும் திறமையையும் நிரூபித்தார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion