ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும்

Posted By:

Iyengar Style Poosanikai Kulambu Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான இல்லத்தரிசிகளுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்யும் போது நிச்சயம் அவர்களுக்கு போரடிக்கும்? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் ஒருமுறை வறுத்து அரைச்ச பூசணிக்காய் குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.

Iyengar Style Poosanikai Kulambu Recipe How to Make at Home in Tamil

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் குழம்பு வகைகள் என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த பூசணிக்காய் குழம்பும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த வெந்தய குழம்பு புதுவிதமான சுவையைக் கொடுக்கும். இந்த ஸ்டைல் வறுத்து அரைச்சக் குழம்பு செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.

உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் வறுத்து அரைச்ச பூசணிக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ ஐயங்கார் ஸ்டைல் வறுத்து அரைச்ச குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 2 கப் நறுக்கிய வெள்ளை பூசணிக்காய்
- 1/2 கப் துவரம் பருப்பு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- சிறிய எலுமிச்சை அளவு புளி
- தேவையான அளவு உப்பு

வறுத்து அரைக்க:

- 2 டேபிள் ஸ்பூன் மல்லி விதை
- 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 10 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 அங்குல துண்டு பட்டை
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- கால் கப் துருவிய தேங்காய்

தாளிக்க:

- 3 டீஸ்பூன் கடலை எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை

செய்முறை:

- துவரம் பருப்பைத் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் 4-5 விசில் வரும் வரை சமைக்கவும்.

- அதேசமயம் ஒரு பாத்திரத்தில், நறுக்கிய பூசணிக்காயை மூழ்கும் அளவிற்குச் சற்று அதிகமான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். காய் நன்றாக வேக வேண்டும், ஆனால் குழைந்துவிடக் கூடாது. பிறகு உப்பு சேர்த்து, பாத்திரத்தை மூடி தனியே எடுத்து வைக்கவும்.

- குக்கர் அழுத்தம் வெளியேறியதும், வெந்த பருப்பை நன்கு மசியும் வரை கரண்டியால் நன்கு கடைந்து கொள்ளவும். அதேசமயம் கொட்டை நீக்கிய புளியைக் கழுவி, வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

- ஒரு கடாயை மிதமான-அதிக தீயில் வைத்து, வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களில் பெருங்காயம் மற்றும் துருவிய தேங்காய் தவிர்த்து மற்ற அனைத்தையும் வறுக்கவும்.

- கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரையிலும், கறிவேப்பிலை மொறுமொறுப்பாகும் வரையிலும் வறுக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, பெருங்காயம் மற்றும் துருவிய தேங்காயைச் சேர்த்து, தேங்காயின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- ஊறவைத்த புளியை நன்கு பிசைந்து விழுதாக்கிக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில், வறுத்து வைத்துள்ள பொருட்கள், புளி விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- வேகவைத்த வெள்ளை பூசணிக்காய் மற்றும் பருப்புடன் இந்த விழுதைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் குழம்பின் பதத்திற்கு ஏற்ப கூடுதல் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் அவ்வப்போது கிளறிக்கொண்டே நன்கு கொதிக்கவிடவும். பின்னர் சுமார் 10-15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடிக்கத் தொடங்கியதும், வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இறுதியாகப் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- வர மிளகாய் பழுப்பு நிறமாக மாறும் வரையிலும், கறிவேப்பிலை மொறுமொறுப்பாகும் வரையிலும் வதக்கவும்.

- தயார் செய்த இந்தத் தாளிப்பை, கொதித்துக்கொண்டிருக்கும் குழம்பின் மீது ஊற்றி, உடனடியாக மூடி வைத்துவிடவும்.

- அவ்வளவுதான் சுவையான பூசணிக்காய் வறுத்து அரைச்ச குழம்பு ரெடி. இந்த குழம்பை சாதத்தில் ஊற்றி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, August 10, 2026, 13:14 [IST]
Desktop Bottom Promotion