இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள நினைவுச்சின்னங்கள் என்னென்ன? அவை எங்கு உள்ளது தெரியுமா?

இந்தியாவில் பணம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் தினம்தோறும் பல ரூபாய் நோட்டுகளை பார்க்கிறோம். ஒவ்வொரு நோட்டும் வெவ்வேறு அளவிலும், நிறத்திலும், டிசைனிலும் இருக்கும். இந்திய ரூபாய் நோட்டுகள் என்பவை வெறும் பண மதிப்பு கொண்ட காகிதங்கள் அல்ல. அவை இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் அடையாளங்களாகவும் திகழ்கின்றன.

Historical Monuments That Are Printed On Indian Currency Notes

அனைத்து மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் பின்புறத்திலும் அச்சிடப்பட்டுள்ள இந்தச் சின்னங்கள், இந்திய வரலாற்றின் முக்கிய அடையாளங்களையும், கட்டமைப்புகளையும் அனைவரும் தெரிந்துகொள்வதற்கான ஒரு வழியாக அமைகின்றன. இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், நினைவுச் சின்னங்கள் இடம்பெற்ற இந்த ரூபாய் நோட்டுகள், 2016-ஆம் ஆண்டு முதல் இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பதிவில் இந்திய ரூபாய்களில் இருக்கும் நினைவுச் சின்னங்கள் எங்கு உள்ளன மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

₹500 ரூபாய் நோட்டு - டெல்லி செங்கோட்டை

500 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் இந்தியாவின் முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான டெல்லி செங்கோட்டையின் படம் இடம்பெற்றுள்ளது. இது 17-ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. 'லால் கிலா' என்று அழைக்கப்படும் இக்கோட்டை, முகலாயப் பேரரசர்களின் முக்கிய வசிப்பிடமாக விளங்கியது. இந்தியாவிற்கு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்ததைக் குறிக்கும் வகையில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின உரையை இங்கிருந்துதான் நிகழ்த்தினார். பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 10, 2016 அன்று ரிசர்வ் வங்கி இந்த நோட்டை அறிமுகப்படுத்தியது.

₹200 ரூபாய் நோட்டு - சாஞ்சி ஸ்தூபி, மத்தியப் பிரதேசம்

200 ரூபாய் நோட்டில் மத்தியப் பிரதேசத்தின் சாஞ்சி ஸ்தூபி அச்சிடப்படுகிறது. இந்தியாவின் மிகப் பழமையான பௌத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றான இந்த ஸ்தூபி, கிமு 3-ஆம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகரால் கட்டப்பட்டது. இது இந்தியாவின் மிகவும் பழமையான கல் கட்டுமானங்களில் ஒன்றாகும். இது உலகின் முக்கியமான பௌத்த நினைவுச் சின்னமாகும். இதில் புத்தரின் வாழ்க்கைக் கதைகள் செதுக்கப்பட்ட அழகான நுழைவாயில்கள் உள்ளன. இது பௌத்தர்களின் முக்கிய புனிதத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்வதால் பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

₹100 ரூபாய் நோட்டு - ராணி கி வாவ், குஜராத்

₹100 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் குஜராத்தின் 'ராணி கி வாவ்'வின் படம் இடம்பெற்றுள்ளது. சோலங்கி வம்சத்தைச் சேர்ந்த 11-ஆம் நூற்றாண்டு சாளுக்கிய மன்னர் முதலாம் பீமனின் மனைவியான ராணி உதயமதியால் இந்தப் பழமையான படிக்கிணறு கட்டப்பட்டது. தெய்வங்கள் மற்றும் புராணக் கதாபாத்திரங்களின் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுக்கு இப்படிக்கிணறு பெயர் பெற்றது. ரு கோயிலைப் போன்ற வடிவமைப்பைக் கொண்ட இது, நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் கட்டப்பட்ட நினைவுச் சின்னமாகும்.

₹50 ரூபாய் நோட்டு - ஹம்பி, கர்நாடகா

50 ரூபாய் நோட்டில் கர்நாடகாவின் ஹம்பி தேர் படம் இடம்பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தேர், விட்டலன் கோவில் வளாகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரால் இத்தேர் கட்டப்பட்டது. வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாக இது விளங்குகிறது.

₹20 நோட்டு - எல்லோரா குகைகள், மகாராஷ்டிரா

20 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் மகாராஷ்டிராவில் உள்ள எல்லோரா குகைகளின் படம் இடம்பெற்றுள்ளது. இந்தக் குகை உலகின் மிகப்பெரிய பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகை அமைப்புகளில் ஒன்றாகும். ராஷ்டிரகூட வம்சத்தைச் சேர்ந்த முதலாம் கிருஷ்ண மன்னரால் 8-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்தத் தொன்மையான வளாகத்தில் இந்து, பௌத்த மற்றும் சமண மதக் கலைப் படைப்புகள் உள்ளன. இங்குள்ள பல கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது கைலாசநாதர் கோயில் ஆகும். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில், ஒரே பாறையிலிருந்து செதுக்கி உருவாக்கப்பட்டிருப்பதால் தனித்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

₹10 நோட்டு - சூரியக் கோயில், கோனார்க், ஒடிசா

ஒடிசாவின் கோனார்க்கில் அமைந்துள்ள சூரியக் கோயில், சூரியக் கடவுளின் பிரம்மாண்டமான தேரின் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட 24 சக்கரங்களும் கல் குதிரைகளும் இடம்பெற்றுள்ளன. இந்து மதத்தின் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில், 13-ஆம் நூற்றாண்டில் கங்கா வம்சத்தின் ஒரு பிரிவான 'கிழக்கு கங்கா வம்ச'த்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவரால் கட்டப்பட்டது. கலிங்கக் கட்டிடக்கலை பாணியில் நுணுக்கமான செதுக்கல்களுடன், இது ஒரு பிரம்மாண்டமான தேரின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, July 3, 2026, 15:40 [IST]
Desktop Bottom Promotion