40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இருக்கணுமா? இத படிங்க...

By Maha

நமக்கு எத்தனை வயதானாலும், அழகாகவும் கவர்ச்சியாகவும் தோற்றமளிக்க வேண்டுமென்று நாம் அனைவரும் விரும்புவோம். மேலும் வயது ஆக ஆக நமக்கு அந்த ஆசை மேலும் பெருகும். அதேப்போல் வயது அதிகமாக, நமது அறிவும் கூடும். அதன் காரணமாக, நமக்கு நமது தொழில், உறவுகள், வாழ்க்கை முறை போன்றவற்றில் உள்ள ஞானமும், ஈடுபாடும் அதிகமாகி, நமக்கு நல்லதொரு உறுதியான நம்பிக்கையை அளிக்கிறது. இதன் காரணமாக ஒரு பாதுகாப்பு உணர்வும் வளர்கிறது.

இப்போது வயதாவதன் காரணமாக உடல் கவர்ச்சி குறைந்து விடாமல் பாதுகாக்கவும், உடல் அழகை நவீன ஃபேஷன்களுக்கு ஈடாகப் பேணுவதற்கும் சில குறிப்புகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி வந்தால், வயதானாலும் கவர்ச்சியும் அழகும் குறையாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எளிமையாக இருக்கவும்

எளிமையாக இருக்கவும்

பொதுவாக ஷாப்பிங் செய்யப் போகும் போது நிறைய பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வோம். ஆனால் அவ்வாறு செல்லாமல் மிகவும் எளிமையான பொருட்களை வாங்க வேண்டுமென்ற எண்ணத்துடன் செல்வதே சிறந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் பகட்டான உடையணிந்து செல்வது, அதிகமான அலங்காரங்களோடு செல்வது, விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்து கொள்வது என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது இளைய தலைமுறையினர் எல்லாம் மிகவும் எளிமையான ஆடைகளில் வலம் வரத் தொடங்கிவிட்டார்கள். தற்போதைய ஃபேஷன் எது தெரியுமா? சுருக்கமில்லாத, மடிப்புக்கலையாத, தூய்மையான, எளிமையான அடைகளை அணிவது தான். எனவே உங்களைக் கௌரவப்படுத்திக் காட்டும் வண்ணம், சுருக்கமில்லாத, மடிப்புக் கலையாத, தூய்மையான, எளிமையான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

சிறந்த தையல்காரரைத் தேர்ந்தெடுக்கவும்

சிறந்த தையல்காரரைத் தேர்ந்தெடுக்கவும்

உங்களுக்கு 40 வயது கடந்துவிட்டதா? இனிமேல் உங்களுக்குப் பொருத்தமான ரெடிமேட் ஆடைகளைத் தேடித் தேர்ந்தெடுப்பது கடினம். அதற்காக நேரத்தினை செலவு செய்யவும் நேரம் இருக்காது. ஆகவே உங்களுக்குப் பொருத்தமாக, நீங்கள் விரும்பிய வண்ணம் உங்கள் ஆடைகளை உங்களுக்காகத் தைத்துத் தரத்தக்க ஒரு சிறந்த தையல்காரரைத் தேடித் தேர்ந்தெடுங்கள். உடைகளில் அல்லது அளவில் ஏதேனும் சிறு சிறு மாற்றங்கள் வேண்டுமென்றாலும், அவர் செய்து தருவார். உங்களுடைய உடல் அளவிற்குக் கச்சிதமாக அமையும் வண்ணம் அளவெடுத்துத் தைக்குமாறும், உடைகளின் மேலுள்ள தையல்களை அழகாகத் தெரியுமாறு தைக்குமாறும், நவீன ஃபேஷன்களுக்கு ஏற்றாற் போலவும், கம்பீரத்தினைக் கூட்டிக் காட்டும் வண்ணம் ஆடைகளின் வடிவமைப்பு இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுமாறு தையல்காரருக்கு அறிவுரை கூறுங்கள். மொத்தத்தில் உங்களது கம்பீரமும், கௌரவமும் அவரது தையலில் தான் உள்ளது எனக் கூறுங்கள்.

வயதை எண்ணிப் பெருமை கொள்ளவும்

வயதை எண்ணிப் பெருமை கொள்ளவும்

இதுவரை வாழ்ந்த வருடங்களை எண்ணிப் பெருமை கொள்ள வேண்டும். உங்களை விட இளமையானவர்களுடன் போட்டி போடுவதாக எண்ணிக் கொண்டும், உங்கள் வயதைக் குறைத்துக் காட்ட வேண்டும் என்ற நினைப்புடனும், உங்களுக்கு சற்றும் பொருந்தாத உடைகளை அணியாதீர்கள். கவர்ச்சியான மற்றும் அருவெறுக்கத்தக்க வாசகங்களை அச்சிட்ட சட்டைகள் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணியாதீர்கள். அவை உங்களை இளமையாகக் காட்டது. மாறாக உங்களைப் பற்றிய எண்ணத்தைத் தாழ்த்திவிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தற்போதுள்ள ஃபேஷன்களைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவும்

தற்போதுள்ள ஃபேஷன்களைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவும்

அழகுக் குறிப்புகளைப் பின்பற்றக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அனைத்து ஃபேஷன் குறிப்புகளையும், வேதம் போல கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றாதீர்கள் என்று தான் சொல்கிறோம். ஸ்டைல் என்பது மாதந்தோறும், ஆண்டு தோறும் மாறிக்கொண்டு தான் இருக்கும். ஏன்? நாளுக்கு நாள் கூட ஸ்டைல் என்பது மாறலாம். ஆனால் வயது 40 ஆகிவிட்டால், உங்கள் ஸ்டைலானது காலத்தால் அளிவிட முடியாததாக எளிமையானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஸ்டைலும், ஒவ்வொரு குறிப்பிட்ட வயதினருக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும். அனைத்து ஸ்டைகளும் உங்கள் வயதுக்கு ஒத்ததாக இருக்காது. தற்போதை ஸ்டைல் என்பது கையில்லாத டி-ஷர்ட்டுடன், இறுக்கமான ஜீன்ஸை அணிந்துகொள்வது தான் என்று எல்லா பத்திரிகைகளும் எழுதினாலும், அது உங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா என்று எண்ணிப் பாருங்கள். உங்களைக் கௌரவமாகக் காட்டுமா என்று சற்றே யோசித்துப் பாருங்கள். எனவே வயதுக்குப் பொருத்தமான ஆடைகளை அணிய முடிவெடுங்கள்.

கடந்த காலம் கடந்துவிட்டது என்பதை உணருங்கள்

கடந்த காலம் கடந்துவிட்டது என்பதை உணருங்கள்

சில வருடங்களுக்கு முன்பு இருந்த சில ஃபேஷன்கள் மிகப் பிரபலமாக இருந்த போது, அதற்கு ஏற்றாற் போல ஆடைகளை வாங்கியிருப்போம். கால ஓட்டத்தில் அவை வழக்கிலிருந்து ஒழிந்து போய் இருக்கும். சிறிது ஆண்டுகள் கழித்து, அதே ஃபேஷன் திரும்பவும் உலா வரத் தொடங்கும். அதற்காக, அப்போது வாங்கியிருந்த ஆடைகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து அணிந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. அவை அப்போது நீங்கள் இருந்த வயதில், தற்போது இருப்பவர்களுக்கான தற்போதைய ஃபேஷன்களாகும். அவற்றை இப்போது நீங்கள் அணிந்து கொள்ள ஆசைப்படுவது முட்டாள்தனமாகும். மாறாக நீங்கள் உங்களது இதர ஸ்டைல் விஷயங்களில் கவனத்தை செலுத்துங்கள். உதாரணமாக, நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் சன் கிளாஸ்கள் மற்றும் ஃப்ரேம்கள், எத்தனை எத்தனை ஸ்டைகளில் வருகின்றன என்பதை தெரிந்து, அவற்றை உங்களது வயதுக்கு ஏற்றாற் போலத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளுங்கள். அவை உங்களைக் கவர்ச்சியாகக் காட்டுவதோடு உங்கள் கௌரவத்தையும் நிலை நிறுத்திக் காட்டும்.

கால்சட்டைகளை நம்புங்கள்

கால்சட்டைகளை நம்புங்கள்

மிகவும் நவீனமல்லாத கிளாசிக் மாடலான கால்சட்டைகளை வீட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சிகள் செய்து உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தீர்கள் என்றால், தட்டையான முன்பக்கம் உள்ள கால்சட்டைகள் உடற்கட்டை அழகாக எடுத்துக்காட்டும். அப்படியில்லாமல் சற்று குண்டானவர் என்றால், ஃப்ளீட் உள்ள கால்சட்டைகளை அணிந்தால், தொப்பை மற்றும் கூடுதல் சதைகளை அது மறைத்துக்காட்டும். குறிப்பாக பருத்தியினால் ஆன ஆடைகளையே அணியுங்கள். செயற்கை இழைகளினால் ஆன ஆடைகளை அணிய வேண்டாம். டெனிம் ஆடைகள் பரவாயில்லை. கிழிந்து தொங்கும் ஸ்டைல் மற்றும் தொளதொளப்பான பைகள் நிறைந்த ஆடைகளை இளைஞர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டு, டீசண்ட்டான ஆடைகளை தேர்ந்தெடுங்கள். சொல்லப்போனால் உடலுக்கு கச்சிதமான, காட்டன் அல்லது லினன் துணியினால் ஆன ஆடைகளே உங்கள் வயதுக்குப் பொருத்தமானவை என்பதை நம்புங்கள்.

இதர இணைப்புகள்

இதர இணைப்புகள்

ஆடைகளோடு, நாம் அணிந்து கொள்ளும் இதர பொருட்கள், நமது கம்பீரத்தைக் கூட்டிக் காட்டும். டை-பின்கள், கடிகாரங்கள், சன் கிளாஸ்கள் ஆகியவை 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மிகவும் முக்கியமானவை. காலணிகளும் கூட மிகவும் முக்கியமானவை. அதிலும் உடைகளுக்கு ஏற்றற்போல ஷூக்கள் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கருப்பு பெல்ட் அணிந்து கொண்டு, பழுப்பு நிறத்தில் ஷூக்களை அணிந்து கொண்டால் அது ஏற்றதாக இராது. இதைப் போய் யார் பார்ப்பார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனாலும் அனைவரும் முதலில் இதைத் தான் கவனிப்பார்கள்.

கமலஹாசன் ஸ்டைல்

கமலஹாசன் ஸ்டைல்

கமலஹாசனின் ஸ்டைலைக் கவனியுங்கள். சுத்தமான, கவர்ச்சியான மற்றும் வயதுக்கு ஏற்ற உடை அலங்காரம் அவருடையது. சில சமயங்களில் அவர் அணியும் கேஷுவல் ஆடைகளையும் பாருங்கள். அதுவும் அவரது உடலுக்கு கச்சிதமாகப் பொருந்துவன. ஏனெனில் இவர் தனக்கு எது பொருந்தமானதாக இருக்கும் என்று நன்கு அறிந்தவர். டை-பின்கள், கைக் கடிகாரங்கள், பெல்ட்டுகள் மற்றும் ஷூக்களை மிகப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து அணிகிறார். 'பர்ஃபெக்ட்' என்றால் இது தான்.

காலத்திற்கு ஏற்றாற்போல ஃபேஷன்கள் வந்து போகும். நேற்று இருந்தது இன்று இருக்காது. இன்றிருப்பது நாளை இருக்காது. ஆனால் உங்களுக்கென்று நீங்கள் ஒரு தனிப்பட்ட, பொருத்தமான ஸ்டைலைத் தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள். அதன் மூலம் மற்றவர்களிடம் இருந்து நீங்கள் தனியாகத் தெரிவீர்கள். ஆகவே, வயதுக்கு ஏற்ற, கால வரம்பிற்கு அப்பாற்பட்ட உடை அமைப்பு தான் மிகவும் ஏற்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, August 17, 2013, 14:39 [IST]
Desktop Bottom Promotion