உலகம் முழுக்க பிறந்த நாளுக்கு ஏன் கேக் வெட்டி மெழுகுவர்த்தியை ஊதுகிறார்கள்? அதன் வரலாறு என்ன தெரியுமா?

ஒருவரின் பிறந்த நாள் என்பது அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் பிறந்த ஒவ்வொரு மாதிரியான அனுபவமாக இருந்தாலும் உலகம் முழுவதும் பிறந்த நாளன்று கடைபிடிக்கப்படும் சில சடங்குகள் உள்ளன. அதில் ஒன்றுதான் கேக் வாங்கி அதில் மெழுகுவர்த்தி ஏற்றி பிறந்த நாள் கொண்டாடுபவர் அதை ஊதி அணைத்து வெட்டும்போது அனைவரும் பாட்டுப்பாடுவது. நமக்கேத் தெரியாமல் இந்த பழக்கத்தை நாம் சிறுவயது முதலே கடைபிடித்து வருகிறோம். ஆனால் உலகம் முழுக்க இந்த வழக்கம் பொதுவாக இருப்பதற்கு காரணம் என்ன என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்து உள்ளீர்களா? இதற்கான பதில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்குகிறது. இந்த பதிவில் இந்த வழக்கம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Why Do People Celebrate Birthday With Cake and Candles

கிரேக்கத் தொடர்பு

மெழுகுவர்த்திகளையும், கேக்குகளையும் இணைக்கும் மிகப் பழமையான கதைகளில் ஒன்று பண்டைய கிரேக்கத்துடன் தொடர்புடையது. சந்திரனுடன் தொடர்புடைய கடவுளான ஆர்டெமிஸின் வழிபாட்டாளர்கள், அவருடைய கோவிலில் வட்ட வடிவ கேக்குகளைப் படைத்தனர். சில குறிப்புகள் இந்தக் கேக்குகள் முழு நிலவைப் போல இருந்ததாகவும், சுடர்கள் அல்லது விளக்குகள் அந்தத் தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டியதாகவும் விவரிக்கின்றன. இதுவே பிறந்தநாள் மெழுகுவர்த்திகளின் நேரடித் தோற்றமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகவே மக்கள் கேக்கில் மெழுகுவர்த்திகளை வைத்தார்கள் என்று பண்டைய கிரேக்கப் பதிவுகள் எதுவும் இல்லை.

ஜெர்மனியுடனானத் தொடர்பு

நவீன பிறந்தநாள் கொண்டாட்டங்களின் வரலாறு 18 ஆம் நூற்றாண்டு ஜெர்மனியிலியிருந்து தொடங்குகிறது. கிண்டர்ஃபெஸ்ட் என்று அழைக்கப்படும் ஜெர்மன் குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில், மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்ட கேக்குகள் இடம்பெற்றன. மெழுகுவர்த்திகளின் எண்ணிக்கை குழந்தையின் வயதுக்கு ஏற்ப இருக்கலாம், சில சமயங்களில் ஒரு கூடுதல் மெழுகுவர்த்தி வாழ்க்கையின் மற்றொரு ஆண்டைக் குறிக்கும். மெழுகுவர்த்திகள் பாதுகாப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டன. வரலாற்றுப் பதிவுகளின்படி, குழந்தைகள் தங்கள் பிறந்தநாட்களில் துரதிர்ஷ்டத்திற்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமாக இருந்தது, இதனால் மெழுகுவர்த்தி ஒளி கொண்டாட்டத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு குறியீட்டின் ஒரு பகுதியாக மாறியது. இங்கிருந்துதான் இந்த பாரம்பரியம் நவீனமாகத் தெரியத் தொடங்குகிறது.

கடந்த காலத்தின் வித்தியாசமான பழக்கம்

தற்போது நடைமுறையில் உள்ள வழக்கம் போல மெழுகுவர்த்திகள் உடனடியாக இணைக்கப்படவில்லை. ஜெர்மன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில், மெழுகுவர்த்திகள் அன்றைய தினம் முன்னதாகவே ஏற்றப்பட்டு, மாலை உணவு வரை கேக்கில் இருந்ததாக விவரிக்கின்றன. பின்னர் பிறந்தநாள் குழந்தை அவற்றை அணைத்துவிடும். ஒரே மூச்சில் அனைத்து மெழுகுவர்த்திகளையும் ஊதி அணைத்தால் ஒரு ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவியது.

இது எப்படி உலகளாவிய சடங்காக மாறியது?

நாளடைவில் இந்த வழக்கம் ஜெர்மனியைத் தாண்டியும் பரவியது, குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மானியர்கள் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த போது இது நிகழ்ந்தது. சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் மாறியதால், சாதாரணக் குடும்பங்களிடையே பிறந்தநாள் கொண்டாட்டங்கள் படிப்படியாகப் பொதுவானதாக மாறின. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மெழுகுவர்த்திகளுடன் கூடிய பிறந்தநாள் கேக்குகள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் மிகவும் பிரபலமாகியது. பெருமளவில் தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்திகளும் குழந்தைகளின் பிறந்தநாள் பொருட்களும், இந்தப் பாரம்பரியத்தை அனைத்து பொருளாதார நிலையிலிருந்த குடும்பத்திற்கும் பரவச் செய்தது. பின்னர், அமெரிக்காவின் பிரபலமான கலாச்சாரம் இதை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உதவியது.

Story first published: Friday, November 27, 2026, 10:48 [IST]
Desktop Bottom Promotion