புகைப்பிடிக்காதவர்களிடம் அதிகரிக்கும் வாய்ப்புற்றுநோய்: காரணங்களும், அபாய அறிகுறிகளும் - விளக்கும் டாக்டர்!

World No Tobacco Day 2026: உலகில் புகையிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஏராளம். இந்த மோசமான பழக்கத்தால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுவும் இந்த கொடிய பழக்கமானது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பல்வேறு புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே இந்த புகையிலைப் பொருட்களால் ஏற்படும் உடல்நலக் கேடுகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து உலக அளவில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

World No Tobacco Day 2026 Doctor Explains Why Non-Smokers Are Getting Oral Cancer Causes amp amp Early Warning Signs

பொதுவாக புகைப்பிடிப்பவர்கள் அல்லது புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கே "வாய்ப்புற்றுநோய்" (Oral Cancer) என்பது வரும் என்று நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் சமீப ஆண்டுகளில், குறிப்பாக 30 முதல் 40 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களிடையே, புகைப்பிடிக்காதவர்களுக்கும் வாய்ப்புற்றுநோய் அதிகரித்து வருவது மருத்துவ உலகில் கவலைக்கிடமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளினீகிள்ஸ் மருத்துவமனையின் கிளினிக்கல் லீட் & மூத்த ஆலோசகரும், அறுவை சிகிச்சை புற்றுநோய் நிபுணருமான டாக்டர். விமலாதித்தன் எஸ் அவர்கள் புகைப்பிடிக்காதவர்களிடமும் அதிகரிக்கும் வாய்ப்புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

வாய்ப்புற்றுநோய் எந்த காரணங்களால் வருகிறது?

1. பாசிவ் ஸ்மோகிங்

"வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக "பாசிவ் ஸ்மோகிங்" (Passive Smoking) குறிப்பிடப்படுகிறது. வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடங்களிலோ ஒருவர் புகைப்பிடிக்கும் போது, அதன் நச்சுப் புகையை தொடர்ந்து சுவாசிப்பதும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீண்ட காலத்தில் இந்த மறைமுக புகை (Second-hand Smoke) வாய்ப்புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கலாம்.

2. மதுப்பழக்கம்

அதிகரித்து வரும் மதுப்பழக்கமும் வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். குறிப்பாக இளைஞர்களிடையே அதிகமாக காணப்படும் மது அருந்தும் பழக்கம், உடலின் செல்களை பாதித்து புற்றுநோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

3. HPV தொற்று

"HPV" (Human Papilloma Virus) எனப்படும் வைரஸ் தொற்றும் வாய்ப்புற்றுநோயுடன் தொடர்புடையதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் பெரும்பாலும் பாலியல் தொடர்புகள் (Sexually Transmitted Infection) மூலம் பரவக்கூடியது. சரியான சிகிச்சை பெறாமல் விட்டால், இளம் வயதிலேயே வாய்ப்புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.

4. வாழ்க்கை முறை மாற்றங்கள்

இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன. அதிக அளவில் ஜங்க் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் , அதிக எண்ணெய் மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகள் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதனால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மன அழுத்தம் , தூக்கமின்மை , உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணிகளும் உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு திறனை பாதிக்கின்றன. இதற்கு கூடுதலாக, கூர்மையான பற்கள் காரணமாக ஏற்படும் நீண்ட நாட்கள் ஆறாத வாய்ப்புண்கள் (Non-healing Ulcers) கூட சில நேரங்களில் கேன்சருக்கான ஆரம்ப மாற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடும்" என்று கூறினார்.

World No Tobacco Day 2026 Doctor Explains Why Non-Smokers Are Getting Oral Cancer Causes amp amp Early Warning Signs

வாய்ப்புற்றுநோயின் அறிகுறிகள்

"வாய்ப்புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் பலராலும் சாதாரண பிரச்சனைகளாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக நீண்ட நாட்கள் ஆறாத வாய்ப்புண், வலி இல்லாத வெள்ளை அல்லது சிவப்பு தழும்புகள் (White / Red Patches), நாக்கு அல்லது கன்னப்பகுதியில் கட்டி அல்லது வீக்கம், காரணமின்றி இரத்தப்போக்கு, குரல் மாற்றம், விழுங்குவதில் சிரமம் போன்றவை ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.

"புற்றுநோய் என்றால் கண்டிப்பாக வலி இருக்கும்" என்பது தவறான நம்பிக்கை. ஆரம்ப நிலையில் பல கேன்சர்கள் எந்தவித வலியும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். அதனால் மேற்கண்ட அறிகுறிகள் நீடித்தால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், முழுமையாக குணப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். இளைஞர்களிடையே வாய்ப்புற்றுநோய் அதிகரித்து வருவது சமூக அளவில் ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்பட வேண்டும். விழிப்புணர்வும் ஆரம்ப பரிசோதனையும் உயிர்களை காப்பாற்றக்கூடிய முக்கியமான நடவடிக்கைகளாகும்." என்று டாக்டர் கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, May 30, 2026, 23:05 [IST]
Desktop Bottom Promotion