இந்தியாவின் 'மௌன கிராமம்' என்று அழைக்கப்படும் வினோத கிராமம் எது தெரியுமா? இந்த கிராம மக்கள் ரொம்ப பாவம்

இந்தியாவின் முதுகெலும்பே அதன் கிராமங்கள்தான் என்று கூறுவார்கள். இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்திய கிராமங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. இந்தியாவின் கிராமங்கள் பெரும்பாலும் அவற்றின் அழகிய இயற்கை காட்சிகள், திருவிழாக்கள், கலகலப்பான உரையாடல்கள் மற்றும் ஒற்றுமையான சமூகங்களுக்காகப் போற்றப்படுகின்றன.

Which Village Is Called as the Silent Village of India

கிராமங்கள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கலகலப்பான சூழலும், மக்களும்தான். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு கிராமம் இந்த கற்பனைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகத் திகழ்கிறது. அங்கு அன்றாட வாழ்க்கையில் நிசப்தமே ஆதிக்கம் செலுத்துவதால், அது இந்தியாவின் "அமைதியான கிராமம்" என்ற அடைமொழியால் அழைக்கப்படுகிறது. அது எந்த கிராமம் மற்றும் அதற்கான காரணம் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த கிராமம் எங்கு உள்ளது?

ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் அமைந்துள்ள தட்காய் கிராமம், பசுமையான குன்றுகள், உயர்ந்த மலைகள் மற்றும் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகால் சூழப்பட்டுள்ளது. "மினி காஷ்மீர்" என்று பிரபலமாக அழைக்கப்படும் பாதர்வாஹ் பகுதியிலிருந்து சுமார் 105 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்தக் கிராமம், பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமானதாகக் கருதப்படுகிறது. இந்தக் கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் காது கேளாதவர்களாகவோ, பேச முடியாதவர்களாகவோ அல்லது கடுமையான செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுகள் உள்ளவர்களாகவோ உள்ளனர். இந்தக் கிராமத்தில் சுமார் 105 குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும், இங்குள்ள மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பிறப்பிலிருந்தே செவித்திறன் அல்லது பேச்சுத் திறன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எப்படி தொடர்பு கொள்கின்றனர்?

இங்குள்ள பல குடியிருப்பாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள சைகைகளையும், சைகை மொழியையும் நம்பியுள்ளனர். இந்த கிராமத்தில் சாதாரண உரையாடல்களின் சத்தங்களையோ அல்லது குழந்தைகள் விளையாடும் ஒலியையோ மிகவும் அரிதாகவே கேட்க முடியும். இந்தக் கிராமத்தில் காது கேளாமை மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் நிகழ்வுகள் பல தலைமுறைகளாகவே இருப்பதாக இந்த கிராமத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். 1901-ஆம் ஆண்டிலேயே இது குறித்த முதல் பதிவு காணப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவிட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அறிவியல் காரணம் என்ன?

இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதற்கு மரபணு காரணங்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த கிராமத்தின் குறைபாட்டிற்கு பல அறிவியல் பூர்வமான விளக்கங்கள் கூறப்பட்டாலும், கிராம மக்கள் சிலர் இந்த நிகழ்வை உள்ளூர் நம்பிக்கைகள் அல்லது சாபங்களுடன் தொடர்புபடுத்துகின்றனர்.

சமூகரீதியான சவால்கள்

கிராம மக்களின் இக்குறைபாடு சமூக ரீதியான சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுகள் குறித்த சமூகத்தின் தவறான கண்ணோட்டம் காரணமாக, சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றன. தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்துக் கவலை கொண்டுள்ள பல குடும்பங்கள், வேலை வாய்ப்புகள் மற்றும் மருத்துவ வசதிகளைத் தேடி வேறு மாநிலங்களுக்குக் கூட இடம்பெயர்ந்துள்ளன.

அரசின் நலத்திட்டங்கள்

இந்த கிராமத்து மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்த இந்திய ராணுவத்தின் 'ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ்' பிரிவு, இந்த கிராமத்தைத் தத்தெடுத்து, அங்கு வசிப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகளுக்காகச் சிறப்புக் கல்வித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளையில், சைகை மொழியைக் கற்பிக்கவும் தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்தவும் பயிற்சி பெற்ற நிபுணர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், கிராம மக்களுக்கு உணவு, உடை, சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய உதவிகளை வழங்குவதிலும் ராணுவம் கவனம் செலுத்தி வருகிறது.

Story first published: Friday, July 10, 2026, 22:31 [IST]
Desktop Bottom Promotion