உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப தீவிர மன அழுத்தத்தில் இருக்கீங்கன்னு அர்த்தம்.. உஷார்..

World Mental Health Day 2025: ஒருவருக்கு மன ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. மன ஆரோக்கியமானது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. ஏனெனில் ஒருவரது மனம் அந்நபரின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளைப் பற்றியது. இப்படிப்பட்ட மனம் பாதிக்கப்படும் போது அது அந்நபரின் நினைப்புகள், உணர்வுகள் மற்றும் நடந்து கொள்ளும் விதம் போன்றவையும் பாதிக்கப்படும்.

அதுவும் தற்போதைய பரபரப்பான உலகில், அலுவலகத்தில் கொடுக்கப்படும் அதிகப்படியான வேலைப்பளு, இலக்குகள், பொறுப்புகள், தேவைகள், கடமைகள் போன்றவற்றால் நிறைய பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

World Mental Health Day 2025 Doctor Reveals Top 5 Symptoms Of Extreme Stress

இன்னும் நிறைய பேருக்கு தாங்கள் மன அழுத்தத்தில் உள்ளோம் என்பது தெரியாமலேயே, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படி மன அழுத்தத்தைக் கண்டுக் கொள்ளாமல் சாதாரணமாக விடும் போது, அது தீவிரமாகி ஒருவரது மனதில் எதிர்மறை எண்ணங்களை அதிகரித்து, ஒருகட்டத்தில் தவறான முடிவை எடுக்கத் தூண்டிவிடும்.

எனவே இப்படிப்பட்ட மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் மனநல பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு ஒருவர் தீவிரமான மன அழுத்தத்தில் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தெரியும் என்பது குறித்து டாக்டர் ஷர்மிகா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:

அதில் அவர் கூறியதாவது, "நம் அனைவரது வாழ்க்கையிலும் கஷ்டம் என்பது வரத்தான் செய்யும். அதுவும் ஒருவருக்கு மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் இருக்கும் போது, நமக்கே தெரியாமல் நமது உடலுறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்படத் தொடங்கும். நான் கூறும் அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்" என்றும் கூறினார்.

தீவிர மன அழுத்தத்தின் அறிகுறிகள்

1. திடீர் அழுகை

சந்தோஷமான மனநிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா? அதுவும் எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று அழுகை வருகிறதா? அப்படியானால் தீவிரமான மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

2. கை நடுக்கம்

எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா? அப்படியானால் அது மன அழுத்தத்தின் ஒரு அறிகுறி என்று டாக்டர் கூறினார். எனவே உங்களுக்கு இப்படி அடிக்கடி விரல் தானாக அசைந்தாலோ அல்லது துடித்தாலோ, உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்யுங்கள்.

3. கண் துடித்தல்

கண்கள் திடீரென்று துடிக்கிறதா? அப்படி கண்கள் அடிக்கடி துடித்தால், நீங்கள் மன அழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர் கூறினார். ஆகவே உங்கள் கண்கள் இப்படி வழக்கத்திற்கு மாறாக துடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து சோதித்துப் பாருங்கள்.

4. சிறுநீர் கசிவு

இருமல், தும்மலின் போது மட்டும் சிறுநீர் கசிவு ஏற்படாமல், உட்கார்ந்திருக்கும் போது சிறுநீர் கசிவை சந்தித்தால், அது மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர் கூறினார். சிறுநீர் கசிவு என்பது கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் கசியும் நிலையாகும். இந்த சிறுநீர் கசிவு மற்றும் மன அழுத்தம் இரண்டிற்கும் இடையே ஒரு தொடர்புள்ளது. ஆனால் நேரடி தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் நீண்ட கால மன அழுத்தமானது சிறுநீர்ப்பை மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தலுக்கு வழிவகுக்கும்.

5. கை மூட்டுகளில் வலி

முக்கியமாக உடல் வலியுடன் உங்களின் கை மூட்டுக்களிலும் வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று டாக்டர் ஷர்மிகா கூறினார்.

"மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், அவற்றை எளிதில் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகி, மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள். பல வேலைகளை செய்யுங்கள். முக்கியமாக நீங்கள் ஒரு விஷயத்திற்கு அடிமையாக இருந்தால், கண்ணை மூடிக் கொண்டு அதிலிருந்து வெளிவந்துவிடுங்கள். மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்." என்றும் டாக்டர் ஷர்மிகா கூறினார்.

எனவே நண்பர்களே! உங்களிடம் இந்த அறிகுறிகள் தெரிகிறதா? அப்படியானால் அந்த அறிகுறிகளை கவனித்து, உடனே மருத்துவரை அணுகி, மன அழுத்தத்தில் இருந்து மீண்டுவர முயலுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, October 10, 2025, 12:22 [IST]
Desktop Bottom Promotion