உங்க நுரையீரல் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..

World Lung Day 2025: நமது உடலில் நுரையீரல் மிகவும் முக்கியமான உறுப்புகளாகும். இந்த நுரையீரலின் முக்கியமான வேலை வாயு பரிமாற்றம் ஆகும். அதாவது இவை ஆக்ஸிஜனை உடலுக்குள் உள்ளிழுத்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிட உதவுகின்றன. இந்த ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை இதயம் அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்புகின்றன. இதனால் நுரையீரல் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்வதிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.

தற்போது சுற்றுச்சூழல் மாசுபாடு, முக்கியமாக காற்று மாசுபாட்டின் காரணமாக ஏராளமான சுவாச பிரச்சனைகளால் சிரமப்படுகின்றனர். இது தவிர கூடுதலாக புகைப்பிடிக்கும் பழக்கமும் ஒருவரது நுரையீரல் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது இப்படியே நீடித்தால், பின் நுரையீரல் மீளமுடியாத அளவில் சேதமடைந்துவிடும். நுரையீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

World Lung Day 2025 Pulmonologist Lists Best Foods For Lungs Health

இந்த நுரையீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், சுவாச நோய்களுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், ஆண்டுதோறும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலக நுரையீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பதோடு, தினசரி உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டு, நல்ல சத்தான உணவுகளையும் தினசரி உணவில் சேர்த்து வர வேண்டும்.

நுரையீரல் நிபுணரான டாக்டர் சோனியா கோயல், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுரையீரலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவும் 15 உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "வலுவான, ஆரோக்கியமான நுரையீரல் வேண்டுமா? அப்படியானால் மாசுபாடு, தொற்றுகள் மற்றும் வயதாவதால் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்த்து போராட நுரையீரலுக்கு வேண்டிய சத்தை வழங்குவதில் உணவுகள் முக்கிய பங்கை வகிக்கிறது." என்று கூறினார். அதோடு நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினசரி உணவில் சேர்க்க வேண்டிய டாப் 15 உணவுகளையும் பகிர்ந்துள்ளார்.

1. ஆப்பிள் - ஆப்பிளில் ப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. இவை ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த நுரையீரலின் திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன.

2. மஞ்சள் - மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நாள்பட்ட நுரையீரல் நோயை எதிர்த்து போராடி பாதுகாக்க உதவுகின்றன.

3. பூண்டு - பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் உள்ளன. இது அழற்சிளைக் குறைக்கவும், நுரையீரல் தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

4. இஞ்சி - இஞ்சி காற்றுப் பாதைகளை சுத்தம் செய்யவும், நெரிசலைக் குறைக்கவும், சுவாச தொற்றுகளை எதிர்த்துப் போராடும் உதவுகின்றன.

5. க்ரீன் டீ - க்ரீன் டீயில் கேட்டசின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை நுரையீரல் அழற்சியைக் குறைக்க உதவி புரியும்.

6. கொழுப்பு நிறைந்த மீன் (சால்மன், கானாங்கெளுத்தி) - இந்த வகை மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது காற்றுப் பாதையில் உள்ள வீக்கத்தைக் குறைப்பதோடு, சுவாசத்தை மேம்படுத்த உதவுகின்றன.

7. வால்நட்ஸ் - இதில் தாவர அடிப்படையிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நுரையீரல் திசுக்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன.

8. பெர்ரிப்பழங்கள் (ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி) - பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளன. இது மாசுபாட்டால் ஏற்படும் நுரையீரல் சேதத்தில் இருந்து தடுக்கும்.

9. மாதுளை - இந்த மாதுளம் பழத்தில் எலாஜிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது நுரையீரல் சேதத்தை மெதுவாக்கும்.

10. தக்காளி - தக்காளியில் லைகோபைன் உள்ளது. இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

11. பச்சை இலை காய்கறிகள் (பசலைக்கீரை, கேல்) - இவற்றில் நுரையீரலின் திறனை ஆதரிக்கும் மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன.

12. சிட்ரஸ் பழங்கள் (ஆரஞ்சு, எலுமிச்சை) - இவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் நுரையீரல் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

13. கேரட் - கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் உடலினுள் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது. இது ஆரோக்கியமான நுரையீரல் புறணியை பராமரிக்கிறது.

14. பீட்ரூட் - பீட்ரூட்டில் நுரையீரலில் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்தும் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன.

15. ப்ராக்கோலி - ப்ராக்கோலியில் சல்ஃபோராபேன் உள்ளது. இது நுரையீரல் பாதுகாப்பு நொதிகளை செயல்படுத்தும்.

"நாம் உண்ணும் உணவுத் தட்டில் எவ்வளவு வண்ணமணமான உணவு இருக்கிறதோ, அந்த அளவில் மாசுபாடு மற்றும் நச்சுக்களை எதிர்த்துப் போராட நுரையீரலுக்கு அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும். நுரையீரல் வலுவாக இருந்தால், வாழ்க்கை வலுவாக இருக்கும். எனவே சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் வழக்கமான பரிசோதனைகள் மூலம் நுரையீரலை கவனித்துக் கொள்ளுங்கள்" என்று டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டுமானால், மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, September 25, 2025, 12:50 [IST]
Desktop Bottom Promotion