World Hypertension Day 2024: உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த நோய் வர நிறைய வாய்ப்பிருக்கு..

World Hypertension Day 2024: உலகளவில் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த உயர் இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதி உலக உயர் இரத்த அழுத்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்தை ஹைப்பர் டென்சன் என்றும் அழைப்பர்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனையின் போது, இதயம் இரத்தத்தை மற்ற உறுப்புகளுக்கு அழுத்துவது கடினமாகி, இதயம் கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இப்படி இதயம் தொடர்ந்து கடினமாக வேலை செய்தால், நாளடைவில் அது இதய நோய்களுக்கு வழிவகுத்துவிடும். இது தவிர உயர் இரத்த அழுத்தமானது பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரித்துவிடும்.

World Hypertension Day 2024 Top 7 Chronic Conditions Caused By High Blood Pressure In Tamil

எனவே ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பின் ஒவ்வொருவரும் தங்கள் இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து, கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இப்போது உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது எந்த மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதைக் காண்போம்.

1. இதய நோய்

உயர் இரத்த அழுத்தம் முதலில் இதய நோயின் அபாயத்தை தான் அதிகரிக்கும். ஏனெனில் உயர் இரத்த அழுத்தத்தின் போது இதயத்திற்கு செல்லும் தமனிகள் தடிமனாவதோடு, அதன் நெகிழ்வுத்தன்மை குறைந்துவிடுகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவதோடு, கரோனரி தமனி நோய், மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

2. பக்கவாதம்

உயர் இரத்த அழுத்தம் வரத் தூண்டும் மற்றொரு ஆபத்தான பிரச்சனை தான் பக்கவாதம். எப்படியெனில், உயர் இரத்த அழுத்தம் மூளையில் உள்ள இரத்த நாளங்களை வலுவிழக்க செய்வதோடு, சிதைவடையச் செய்து, அதன் விளைவாக பக்கவாதத்தை உண்டாக்குகிறது. இதனால் சில சமயங்களில் இந்த பக்கவாதம் நரம்பியல் பாதிப்பு அல்லது மரணத்தை உண்டாக்கலாம்.

3. சிறுநீரக பாதிப்பு

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களுக்குள் உள்ள இரத்தக்குழாய்களை சேதப்படுத்தும். இந்த சேதத்தால் சிறுநீரகங்களால் இரத்தத்தை வடிகட்டும் திறன் பாதிக்கப்படும். இது நீடிக்கும் போது நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் சில சமயங்களில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும்.

4. பார்வை இழப்பு

உயர் இரத்த அழுத்தம் உங்கள் விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களையும் பாதிக்கலாம். அதுவும் இரத்த அழுத்தம் கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீடித்திருக்கும் போது, அது உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய்க்கு வழிவகுக்கிறது. இந்த நோய் பார்வையை மங்கலாக்குவதோடு, கண்களில் இரத்தக்கசிவு மற்றும் பார்வை இழப்பை உண்டாக்கிவிடும்.

5. புற தமனி நோய் (Peripheral Artery Disease)

உயர் இரத்த அழுத்தம் ஒருவருக்கு புற தமனி நோயை உண்டாக்கக்கூடும். எப்படியெனில், உயர் இரத்த அழுத்தத்தின் போது கால்கள் மற்றும் கைகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகளை சுருக்கி கடினமாக்குகிறது. இந்நிலையின் போது, கால்கள் மற்றும் கைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து, வலி மற்றும் உணர்வின்மையை ஏற்படுத்தும்.

6. அனூரிசம்ஸ்

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் தமனிகளின் சுவர்களை பலவீனமடையச் செய்வதோடு, தமனிகளை பலூன் போன்று வீங்கச் செய்து அனூரிசம்ஸை உருவாக்கலாம். ஒரு கட்டத்தில் இது வெடித்து இரத்தக்கசிவை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கலாம்.

7. நினைவாற்றல் இழப்பு

உயர் இரத்த அழுத்தம் ஒருவரது அறிவாற்றலை பாதித்து, டிமென்ஷியாவின் அபாயத்தை அதிகரிக்கலாம். எப்படியெனில் உயர் இரத்த அழுத்தத்தின் போது மூளைக்கு இரத்த ஓட்டம் மோசமாக இருக்கும். இதன் விளைவாக மூளை பாதிக்கப்பட்டிருக்கும். காலப்போக்கில் இது அறிவாற்றல் திறனை பாதித்து, நினைவாற்றலை இழக்கச் செய்யும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, May 17, 2024, 14:40 [IST]
Desktop Bottom Promotion