Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
Nipah Virus: கேரளாவில் பரவும் நிப்பா வைரஸ்.. முக்கிய அறிகுறிகளை புட்டுபுட்டு வைத்து எச்சரிக்கும் மருத்துவர்..
Nipah Virus Symptoms In TAmil: இந்தியாவிலேயே கேரளாவில் தான் நிறைய வைரஸ்கள் தோன்றி பரவத் தொடங்குகின்றன. அந்த வகையில் தற்போது கேரளாவில் பழம் திண்ணி வவ்வால்கள் மூலம் பரவக்கூடிய நிப்பா வைரஸ் தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த தொற்றால் இரண்டு பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கேரளா நமது தமிழ்நாட்டிற்கு அருகில் இருப்பதோடு, நிறைய பேர் தினமும் அங்கு பயணிக்கின்றனர். இதனால் தமிழ்நாட்டிலும் இத்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. எனவே நிப்பா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க, இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த நிப்பா வைரஸ் குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை பொது நல மருத்துவர் டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நிப்பா எனும் இந்த நோய் வைரஸ் மூலம் உண்டாகிறது. மலேசிய நாட்டின் "சுங்கய் நிப்பா" எனும் கிராமத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. அங்கு பரவிய இந்த நோய் தொற்றானது 265 பேருக்குப் பரவி 108 மரணங்களை உண்டாக்கி மிரட்டியது. பழம் திண்ணி வவ்வால்கள் தான் இந்த நோய் தொற்றை உருவாக்கும் வைரஸின் முதல் நிலை நோய் பரப்பிகள் .
நிப்பா வைரஸால் தொற்றுக்குள்ளான பழம் திண்ணி வவ்வால் இனம் சுவைத்த பனை மரக் கள்ளை மனிதர்கள் பருகும் போதும், இத்தகைய வவ்வால்களின் எச்சங்கள் மற்றும் சிறுநீர் கழிவுகளுடன் நேரடி தொடர்பில் மனிதர்களோ பன்றிகள் போன்ற கால்நடைகளோ வரும் பொழுது தொற்றுப்பரவல் நிகழ்கிறது. மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும் தன்மையும் இந்த நோய்க்கு உண்டு.
மருத்துவமனைகளுக்குள் நிப்பா தொற்றுக்குள்ளான நோயாளியிடம் இருந்து மருத்துவ ஊழியர்களுக்கு பரவிய தகவல்களும் அறியக் கிடைத்துள்ளன. தொற்றுக்குள்ளான மனிதர்களின் உடல் திரவங்களான சிறுநீர்/ எச்சில்/ உதிரம் போன்றவற்றில் நிப்பா வைரஸ் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
தொற்றுக்குள்ளானோருக்கு அறிகுறிகளற்ற தொற்று நிலை முதல் தீவிர சுவாசப்பாதை தொற்று / மூளையைத் தாக்கும் தீவிர தொற்று நிலையை அடையக்கூடும். வைரஸ் கிருமி உடலில் நுழைந்த இரண்டு வாரம் முதல் மூன்று வாரங்களுக்குள் தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றலாம்.
நிப்பா வைரஸ் தொற்றின் அறிகுறிகள்:
* காய்ச்சல்
* தலைவலி
* உடல் வலி
* வாந்தி குமட்டல்
* தொண்டை வலி
இன்னும் தீவிரமானால்...
* தலை சுற்றல்
* சோர்வு அசதி
* பிதற்றல்
* புத்தி பேதலித்த நிலை
* இத்துடன் மூளையைத்தாக்கி மூர்ச்சை நிலையை உண்டாக்க வல்லது. சில நேரங்களில் வலிப்பு ஏற்படக்கூடும். இவையன்றி சுவாசப்பாதையைத் தாக்கி கோவிட் நோயைப் போல நிம்மோனியா மற்றும் தீவிர நுரையீரல் தொற்றை உருவாக்கவல்லது.
மூளையைத் தாக்கும் நிலைக்குச் சென்று மீண்டோரிடையே 20%பேருக்கு தொடர்ந்து வலிப்பு அல்லது நரம்பியல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த நோய் தொற்றுக்குள்ளானோரில் 40-75% என்ற மரண விகிதத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. கோவிட்டைப் போலவே உடல் திரவங்களில் வைரஸை ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் அறியலாம்.
எவ்வாறு தடுப்பது?
இன்னும் இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டறியப்படவில்லை. பன்றிகள் போன்ற கால்நடைகளை வளர்ப்பவர்கள் தொழுவங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். பன்றிகள் தொற்றுக்குள்ளானது தெரிந்தால் ( நாய் போல குரைத்து இருமுவது பன்றிகளிடையே தோன்றும் முக்கிய அறிகுறி) அந்த தொழுவத்தை தனிமைப்படுத்திட வேண்டும். மற்ற கால்நடைகளுடன் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விலங்குகளிடையே தோன்றும் நோய்கள் குறித்தும் தொடர் கண்காணிப்பில் நாம் ஈடுபட வேண்டும். விலங்குகளிடையே அசாதாரண தன்மை அல்லது மரணங்கள் விளைந்தால் உடனே அதற்குண்டான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்
தொற்றுக்குள்ளான விலங்குகளை கையாள்பவர்கள் கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து அக்காரியங்களை செய்ய வேண்டும். தொற்றுக்குள்ளான மனிதர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களை கவனித்துக்கொள்ளும் உறவினர்கள் கட்டாயம் முகக்கவசம் / கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை வழலை கொண்டு கழுவ வேண்டும்.
வவ்வால் தின்று மீதமுள்ள பழங்களை தவிர்த்து விடுவது சிறந்தது. நிப்பா தொற்றின் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவர்களை நாடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்கு முன்பு கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு 23 பேருக்கு நிப்பா தொற்று ஏற்பட்டதில் 17 பேர் இறந்தனர். 2021 ஆம் ஆண்டு ஒரு சிறுவன் நிப்பா தொற்றுக்கு உள்ளாகி கோழிக்கோடு மாவட்டத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது. நமது அண்டை நாடான பங்களாதேஷில் ஆண்டுக்கொருமுறை நிப்பா வைரஸ் பரவல் நடந்து வருகிறது. எல்லை மாநிலமான மேற்கு வங்கத்திலும் அதன் தாக்கம் இருப்பதை காண முடிகிறது.
கேரளாவில் நிப்பா வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கான காரணம்
இந்த வைரஸின் இயற்கையான புகலிடமான பழந்திண்ணி வவ்வால்கள் அங்கு குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில் அதிகமாக வசிக்கின்றன. இந்த நோய் குறித்து அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தற்போது கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிப்பா தொற்றுப் பரவல் நடந்து வருவதால் அம்மாவட்டத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்ப்பது நலம்.
இந்த நோய் அச்சமூட்டும் வகையில் இறப்பை ஏற்படுத்தும் சதவிகிதத்தைக் கொண்டிருந்தாலும், தொற்று அடைந்த ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மை மிகக் குறைவாகவே இருந்து வந்திருக்கிறது தொற்று கண்ட ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதை "ஆர்- நாட் வேல்யூ" என்று குறிப்பிடுவோம்.
நிப்பா வைரஸின் சராசரி ஆர்-நாட் வேல்யூ - ஒன்றுக்கும் கீழே 0.48 என்ற அளவிலேயே உள்ளது. இதனாலேயே இதுவரை ஏற்பட்ட பரவல் நிகழ்வுகளில் அதிகமான மக்களுக்கு பரவவில்லை. தொற்று நோய் பரவலில் முக்கியமான விதி ஒன்று உள்ளது. அதிகமான அளவு மரண விகிதத்தை ஏற்படுத்தும் தொற்று நோய்கள் பரவும் விகிதம் குறைவாக இருக்கும்.
கேரள மாநில மக்கள் நல்வாழ்வுத்துறையும் மத்திய சுகாதாரத் துறையும் கண்காணிப்பை வலுப்படுத்தி தொற்று கண்டவர்களிடம் (INDEX CASES) தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தி விடுவதால் இந்த தொற்று பரவல் கட்டுக்குள் வரும்.
தற்போதைய நிப்பா நோய்ப்பரவல் நிலையில் கடைசி நோய் தொற்றாளர் கண்டறியப்பட்டு 42 நாட்கள் (Double Incubation period) எந்த புதிய நோயாளரும் கண்டறியப்படவில்லை எனில் கொள்ளை நோய் பரவல் முற்று பெற்றதாக அறிவிக்கப்படும். அதுவரை அச்சமின்றி எச்சரிக்கையுடன் இருப்போம் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











