Latest Updates
-
நவம்பர் இறுதியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும், பணம் குவியும்! -
அரைச்சுவிட்ட சிக்கன் சால்னா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
நவம்பர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
செட்டிநாடு கத்திரிக்காய் அவியல் குழம்பு ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
வார ராசிபலன் ( November 22-28)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்கள பிரச்சினைகள் விடாம துரத்தப்போகுதாம் -
சிக்கன் வாங்குனா இந்த பாலக்காடு சிக்கன் வறுவலை செஞ்சு பாருங்க - எவ்வளவு செஞ்சாலும் பத்தாது -
தேங்காயில் மூன்று கண்கள் இருப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
நவம்பர் 25-ல் கன்னி ராசிக்குள் நுழையும் செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி ராஜஸ்தான் ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும்
மூச்சுத்திணறல் நுரையீரல் பிரச்சனை மட்டுமல்ல.. இதய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
Shortness of Breath And Heart Disease: ஒருவருக்கு மூச்சுத்திணறல் (Breathlessness) ஏற்பட்டால், முதலில் அது நுரையீரல் தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், சில நேரங்களில் மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம், இதயத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதய நோயின் முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளில் மூச்சுத்திணறலும் ஒன்று.

சிலருக்கு இந்த மூச்சுத்திணறல் இதயப் பிரச்சனையின் ஆரம்ப அறிகுறியாகக் கூட வெளிப்படலாம். இந்த மூச்சுத்திணறலுக்கும், இதய பிரச்சனைக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து சென்னையில் உள்ள கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் இதயநோய் நிபுணரான டாக்டர். சஞ்சீவ் வி கே அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
மூச்சுத்திணறலுக்கும், இதயப் பிரச்சனைக்கும் என்ன தொடர்பு?
"உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்சிஜன் சென்றடைவதில் இதயமும் நுரையீரலும் இணைந்து செயல்படுகின்றன. நுரையீரல் நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து ஆக்சிஜனை இரத்தத்தில் சேர்க்கிறது. இதயம் அந்த ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் அனுப்புகிறது. இதயம் இரத்தத்தைச் சரியாக உந்தித் தள்ள முடியாதபோது, நுரையீரலுடன் தொடர்புடைய ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கலாம். இதனால் நுரையீரலில் திரவம் தேங்கலாம். இதன் காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம். இதயச் செயலிழப்பு (Heart Failure) உள்ளவர்களிடம் இத்தகைய பாதிப்பு காணப்படலாம்." என்று டாக்டர் கூறினார்.
மூச்சுத்திணறலை ஏன் அலட்சியப்படுத்தக்கூடாது?
"அன்றாட வேலைகளைச் செய்யும் போதே மூச்சுத்திணறல் ஏற்படுவது கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறியாகும். முன்பு சிரமமின்றி நடந்து சென்றவர், படிக்கட்டுகளில் ஏறியவர் அல்லது வீட்டுப் பணிகளைச் செய்தவர், இப்போது இவற்றைச் செய்யும் போது திடீரென அதிகமாகக் களைப்படையலாம் அல்லது மூச்சு வாங்கலாம். சிலருக்கு ஓய்வில் இருக்கும் போது கூட மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
படுத்தால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதால், இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்துத் தூங்க வேண்டிய நிலை வரலாம். இன்னும் சிலர் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு விழித்துக்கொள்ளலாம். இவை இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்." என்று டாக்டர் கூறினார்.
நெஞ்சு வலி இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம்
"மாரடைப்பு ஏற்பட்டால் எல்லோருக்கும் கடுமையான நெஞ்சு வலி இருக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலே முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இதனுடன் வழக்கத்திற்கு மாறாக வியர்வை வருதல், குமட்டல் , தலைச்சுற்றல், அதிகப்படியான சோர்வு அல்லது நெஞ்சு, முதுகு, தாடை, கைகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்ற வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே, காரணம் தெரியாமல் ஏற்படும் மூச்சுத்திணறலை வெறும் சோர்வாகவோ வயது அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனையாகவோ கருதி அலட்சியப்படுத்தக் கூடாது." என்று டாக்டர் கூறினார்.
யாருக்கு இதயப் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம்?
"உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இரத்தத்தில் அதிக கொழுப்பு, உடல் பருமன், புகைப்பழக்கம் மற்றும் குடும்பத்தில் இதய நோய் பாதிப்பு இருந்திருப்பது போன்றவை இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கின்றன. ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்கள், புதிதாக மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ அல்லது ஏற்கெனவே இருந்த மூச்சுத்திணறல் அதிகரித்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.
மூச்சுத்திணறலுக்கு இதயம் மட்டுமே காரணமல்ல
"மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான காரணம் எப்போதும் இதயப் பிரச்சனையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நுரையீரல் தொற்று, ஆஸ்துமா, நாள்பட்ட சுவாசப் பிரச்சனைகள் மற்றும் இரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளாலும் மூச்சுத்திணறல் ஏற்படலாம். எனவே, இதயப் பிரச்சனை அல்லது நுரையீரல் பிரச்சனை என்று நாமாகவே முடிவு செய்யாமல், அதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவது அவசியம்." என்று டாக்டர் கூறினார்.
இதயப் பிரச்சனையைக் கண்டறிய உதவும் மருத்துவப் பரிசோதனைகள்
"நோயாளியின் அறிகுறிகள் மற்றும் மருத்துவ வரலாற்றைப் பொறுத்து, மருத்துவர் இதய மின் வரைபடப் பரிசோதனை (ECG), இதயத்தின் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை (Echocardiogram), மார்பு எக்ஸ்-ரே (Chest X-ray) போன்ற பரிசோதனைகளைப் பரிந்துரைக்கலாம். மருத்துவ ரீதியாகத் தேவைப்பட்டால், பிஎன்பி (BNP) அல்லது என்டி-புரோபிஎன்பி (NT-proBNP) போன்ற இரத்தப் பரிசோதனைகளும் செய்யப்படலாம். இதயச் செயலிழப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா என்பதை மதிப்பிடவும், இதயத்தின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ளவும் இந்தப் பரிசோதனைகள் உதவுகின்றன." என்று டாக்டர் கூறினார்.
எந்த அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவ உதவி தேவை?
"திடீரென அல்லது கடுமையாக மூச்சுத்திணறல் ஏற்பட்டால், குறிப்பாக நெஞ்சில் அசௌகரியம், குளிர்ந்த வியர்வை, மயக்கம், கடுமையான தலைச்சுற்றல் அல்லது உதடுகள் நீல நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகளும் இருந்தால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும். மூச்சுத்திணறல் லேசாக இருந்தாலும், அடிக்கடி ஏற்பட்டாலோ அல்லது படிப்படியாக அதிகரித்தாலோ மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
முக்கியமாக, மூச்சுத்திணறலை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. அது நுரையீரல் பிரச்சனையால் மட்டுமே ஏற்படுகிறது என்று நினைத்துவிடவும் கூடாது. மூச்சுவிடுவதில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பதும், அதனுடன் தோன்றும் மற்ற அறிகுறிகளை அடையாளம் காண்பதும், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகுவதும் இதயப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தீவிரமான பாதிப்புகளைத் தடுக்க உதவும்." என்று டாக்டர் சஞ்சீவ் கூறினார்.



Click it and Unblock the Notifications



