அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..

Veg Foods Equal To Non-Veg Foods In Tamil: புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டது. இந்த புரட்டாசி ஆரம்பித்தாலே நிறைய வீடுகளில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். இப்படி அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருக்கும் போது, சரியான சைவ உணவுகளை தேர்ந்தெடுத்து உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஒருவேளை சேர்க்காமல் போனால், அதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடுகளை சந்திக்க நேரிடும்.

Doctor Shares List of Vegetarian Foods That Have Same Nutrients As Non-Vegetarian Foods

உணவுகளிலேயே அசைவ உணவுகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஏனெனில் கோழி, ஆடு, மீன் போன்றவை தங்களுக்குரிய உணவுகளை தேடி உட்கொள்கின்றன. இதனால் அதன் இறைச்சிகளில் சத்துக்கள் ஏராளமான அளவில் இருக்கும். ஆனால் சைவ உணவுகளை எடுத்துக் கொண்டால், குறிப்பிட்ட உணவுகளில் குறிப்பிட்ட சத்துக்கள் தான் இருக்கும்.

இந்த புரட்டாசி மாதத்தில் நீங்கள் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டீகள் என்றாலோ அல்லது சைவ உணவாளர்களாக இருந்தாலோ, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட வகையான உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வர வேண்டும். டாக்டர் பிள்ளை அவர்கள் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அசைவ உணவுக்கு இணையான சத்துக்கள் நிறைந்த சைவ உணவுகளை பட்டியலிட்டுள்ளார். அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

1. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

"கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் முக்கியம். அதனால் தான் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இந்த சத்து மாத்திரையை மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே மிகவும் இன்றியமையாதது. பொதுவாக இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மீன்களில் அதிகமாக இருக்கும். அதுவும் சூரை மீன், சால மீன், நெத்திலி மீன், அயில மீன், வஞ்சரம் போன்றவற்றில் இந்த கொழுப்பு அதிகமாக உள்ளன. அதேப் போல் சைவ உணவுகளை எடுத்துக் கொண்டால் வால்நட்ஸ், சியா விதை மற்றும் ஆளி விதை போன்றவற்றில் மீனுக்கு இணையான அளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது" என்று டாக்டர் கூறினார்.

2. லீன் புரோட்டீன்/கொழுப்பு இல்லாத புரோட்டீன்

"கொழுப்பே இல்லாத புரோட்டீன் சிக்கனில் உள்ளது. அப்படியானால் இந்த சிக்கனை சாப்பிட்டால் தான் இந்த சத்து கிடைக்குமா என்றால் இல்லை. சைவ உணவுகளில் பாலில் இருந்து கிடைக்கும் பன்னீர், சோயாவில் இருந்து கிடைக்கும் டோஃபு போன்றவற்றிலும் இந்த லீன் புரோட்டீன் உள்ளது" என்று டாக்டர் கூறினார்.

3. கொலாஜன்

"தற்போது கடைகளில் இந்த கொலாஜன் பவுடர் என்று விற்கிறார்கள். கொலாஜனை பெற இந்த பவுடரை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கொலாஜன் அதிகம் உள்ள அசைவ உணவு என்றால் அது கடல் உணவுகள் தான். அவற்றில் இருந்து தான் கொலாஜன் நிறைய கிடைக்கிறது. மேலும் மனித உடம்பிலும் கொலாஜன் உள்ளது. ஆனால் அந்த கொலாஜன் குறைவதால் தான் மூட்டு வலி எல்லாம் வருகிறது. கொலாஜன் உணவுகளை அதிகம் எடுத்தால் மூட்டு வலிகளையெல்லாம் தடுக்கலாம். அதுவும் இந்த கொலாஜன் நிறைந்த சைவ உணவுகள் என்றால், சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை தான்" என்று டாக்டர் கூறினார்.

4. கொழுப்புள்ள புரோட்டீன்

"கொழுப்புள்ள புரோட்டீன் ஆடு, மாடு போன்றவற்றில் இருந்து எளிதில் கிடைக்கும். அதுவும் மட்டனை சாப்பிடும் போது உடலுக்கு அதிகமாகவே கொழுப்புள்ள புரோட்டீன் கிடைக்கும். இந்த மட்டனுக்கு இணையான சைவ உணவு என்றால் அது மீல் மேக்கர் என்னும் சோயா தான். இதன் சுவையும் மட்டனைப் போன்றே இருக்கும்" என்று டாக்டர் கூறினார்.

5. இரும்புச்சத்து

"உடலுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமான சத்தாகும். இது குறைபாடு இருந்தால் தான் இரத்த சோகை உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகிறது. அதுமட்டுமின்றி நரம்பு, எலும்பு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. சொல்லப்போனால் உடம்பை இரும்பு மாதிரி ஆக்கக்கூடிய சத்து இரும்புச்சத்து. இது அசைவ உணவுகளில் மட்டன், முட்டை, சிக்கன் என அனைத்திலும் உள்ளது. அதுவே சைவ உணவுகளை எடுத்துக் கொண்டால், கீரைகள், பச்சை காய்கறிகள், விதைகள், நட்ஸ், பருப்பு மற்றும் உலர் பழங்களில் அதிகம் உள்ளன" என்று டாக்டர் கூறினார்.

எனவே நிறைய சத்துக்கள் வேண்டுமானால் அசைவ உணவுகளைத் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு இணையான சைவ உணவுகளையும் தினசரி உணவில் சேர்த்து வந்தாலே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, September 19, 2026, 16:17 [IST]
Desktop Bottom Promotion