உடம்பில் உள்ள நச்சுக்களை நீக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்!

Healthy Foods In Tamil: நமது உடல் நச்சுக்களின்றி சுத்தமாக இருந்தால் தான் உள்ளுறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். ஆனால் நமது உடலில் நாம் உண்ணும் உணவுகள், குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று ஆகியவற்றின் மூலம் நச்சுக்கள் தேங்குகின்றன. இப்படி உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கும் போது, உறுப்புக்களின் செயல்பாடு குறைவதோடு, உடலின் மெட்டபாலிச செயல்பாடுகளிலும் இடையூறை ஏற்படுத்தும். முக்கியமாக நச்சுக்கள் உடலில் அதிகரித்தால், அதன் விளைவாக மூளை மந்தம், நாள்பட்ட உடல் சோர்வு, செரிமான பிரச்சனைகள், சரும அழற்சி, உறுப்புக்களில் அழுத்தம் அதிகரிக்கும்.

Doctor Lists Top 3 Foods That Help Your Body Remove Waste Naturally

எனவே உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது என்பது இன்றியமையாதது. அதற்கு ஒருசில உணவுகளே பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? அந்த உணவுகளை நமது உணவில் அடிக்கடி சேர்த்து வருவதன் மூலம், உடலினுள் நச்சுக்கள் தேங்குவதைத் தடுக்கலாம். சித்த மருத்துவரான டாக்டர் ஜெயரூபா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையாகவே வெளியேற்ற உதவும் 3 உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

1. நெல்லிக்காய்

"தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடுங்கள். இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதை தினமும் சாப்பிடும் போது உடலும் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் கழிவுகளும் உடலில் தேங்காது" என்று கூறினார். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தும் மற்றும் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடி நல்ல பாதுகாப்பை வழங்குகிறது. எனவே உங்கள் உடல் வலிமையாகவும், சுத்தமாகவும் இருக்க நினைத்தால், நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள்.

2. சுண்டக்காய்

"வாரம் ஒருமுறையாவது உணவில் சுண்டக்காயை உணவில் சேர்த்து வாருங்கள். இது சற்று கசப்புச் சுவையுடையது தான். ஆனால் இது வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் மற்றும் அல்சர் தொடர்பான பிரச்சனைகளையும் குணப்படுத்தும்" என்று டாக்டர் கூறினார். முக்கியமாக இந்த சுண்டக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இப்படிப்பட்ட சுண்டக்காய் பாரம்பரிய மருத்துவத்தில் செரிமான பிரச்சனையை சரிசெய்யவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்ளவும், இரத்த சோகையை தடுக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

3. அகத்திக்கீரை

"மூன்றாவதாக சாப்பிட வேண்டியது அகத்திக்கீரை. நமது முன்னோர்கள் ஒரு வீட்டில் துக்கம் நடந்தால், மறுநாள் அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட சொல்வார்கள். ஏனெனில் தொற்றுகள் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான். அதேப் போல் இந்த அகத்திக்கீரையை மாதம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி, தொற்றுகள் எளிதில் ஏற்படுவது தடுக்கப்படும்" என்று கூறினார். எனவே அகத்திக்கீரை கிடைத்தால் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

எனவே நண்பர்களே! உங்கள் உடலில் கழிவுகள்/நச்சுக்கள் எதுவும் தேங்கக்கூடாதெனில், மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் உடலும் சுத்தமாக இருக்கும், நன்கு சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, May 26, 2026, 12:08 [IST]
Desktop Bottom Promotion