For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டீ, காபிக்கு செயற்கை சர்க்கரை யூஸ் பண்றீங்களா? இதைப் படிங்க !

By Mayura Akilan
|

Artificial Sugar
சர்க்கரைக்கு பயந்து செயற்கை சர்க்கரையை சாப்பிடுபவர்கள் காசு கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கின்றனர் என்று எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஏனெனில் செயற்கை சர்க்கரையில் உள்ள ரசாயனங்களினால் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் என்று அதிர்ச்சியளித்துள்ளனர்.

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் உடலுக்குத் தேவையான சர்க்கரை கிடைத்துவிடுகிறது. சாதம், கோதுமை உணவுகள், உருளைக்கிழங்கு, பால், காய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றிலும் சர்க்கரை இருக்கும் போது, தனியாக சர்க்கரையை சேர்க்கவேண்டியதில்லை என்பது மருத்துவர்களின் அறிவுரை. தனியாக சேர்க்கப்படும் சர்க்கரையில் எந்த வித சத்துக்களும் இல்லை மாறாக கலோரிகள் அதிகரிக்கின்றன எனவே ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் தேவையில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். கடின உழைப்பாளிகள், குழந்தைகள் மட்டும் நாளொன்றுக்கு 3 முதல் 5 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்துக்கொள்ளலாமாம்.

சர்க்கரையானது சுக்ரோஸ்( வீட்டில் உபயோகப்படுத்துவது) லாக்டோஸ் ( பாலில் உள்ளது) ப்ரக்டோஸ் ( பழங்களில் உள்ளது) மால்டோஸ் மற்றும் குளுக்கோஸ் என பலவகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நாம் சாப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் சர்க்கரை கரும்புச்சாறில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பழுப்பு நிற சர்க்கரையை பயன்படுத்துவதனால் உடலுக்கு தீங்கில்லை. அதேசமயம் ரசாயனம் சேர்த்து வெண்மையாக்கப்பட்ட சர்க்கரை உடலுக்கு தீங்கு தரக்கூடியது. இதனை அதிகம் சேர்த்துக்கொண்டால் உடலில் கலோரிகள் அதிகரித்து உடல்பருமன், பற்களில் பாதிப்பு, நீரிழிவு போன்றவை ஏற்படுகின்றன.

இதனை தவிர்க்கவும், கலோரிகளை கட்டுப்படுத்தவும் செயற்கை சர்க்கரை அறிமுகம் செய்யப்பட்டது. செயற்கை சர்க்கரையை பொறுத்த வரை, சாதாரண சர்க்கரையில் உள்ள இனிப்பைவிட 200 மடங்கு இனிப்பு அதிகம். அதற்கு இந்த அஸ்பார்டேம் என்ற ரசாயன கலவை தான் காரணம். சாதாரண சர்க்கரையில் ஒரு கிராமில் நான்கு கலோரி உள்ளது. ஆனால், செயற்கை சுவீட்னரில் அந்த அளவுக்கு கலோரியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரை ஒரு கோடிப்பேர், செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்துகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த ஐரோப்பிய மலாஸ்ஸினி பவுண்டேஷன் என்ற மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு சிறுநீரகத்தில் புற்று நோய் ஏற்படுவதற்கு இந்த அஸ்பார்ட்டேம் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது. இது எந்த அளவு உண்மை என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும், செயற்கை சுவீட்னர் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிலர் இனிப்புச் சுவைக்கு சர்க்கரைக்கு பதில் செயற்கை சர்க்கரை பயன்படுத்தினால் கலோரி அதிகரிக்காது என்கிறார்கள். சர்க்கரையைத் தவிர்த்து, செயற்கை இனிப்பு சேர்த்தால் எடை கூடாது என்கிற தவறான எண்ணத்தில், பலரும் ஒரு நாளைக்கு அதைச் சேர்த்து ஏகப்பட்ட காபி, டீ, குளிர்பானங்களை அருந்துகிறார்கள் இது தவறான செயல். ஏனெனில் செயற்கை சர்க்கரை என்பது நீரிழிவுக்காரர்களுக்கானது. மற்றவர்களுக்கு அது தேவையே இல்லை.

இயற்கை சர்க்கரை வகையைச் சார்ந்த சுக்ரலோஸை கர்ப்பிணிகள், குழந்தைகள் எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் சாக்ரின், ஆஸ்பர்டேம் என செயற்கை சர்க்கரை வகையறாக்கள் எல்லாமே ரசாயனக்கலப்புள்ளது. நீரிழிவு உள்ளவர்களாக இருந்தாலுமே, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் இந்த செயற்கை சர்க்கரையை எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்களும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 செயற்கை சர்க்கரை மாத்திரைக்கு மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் செயற்கை சர்க்கரையை அதிகமாக உபயோகிப்பதனால் ஒற்றைத் தலைவலி, மனஅழுத்தம், குழப்பம், கண்பார்வை குறைபாடு, புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். மேலும் செயற்கை சர்க்கரையினால் சுவாசக்கோளாறு, தோல் அரிப்பு போன்றவைகளும் ஏற்படுமாம்.

சர்க்கரைக்குப் பதில் சுத்தமான தேன், கருப்பட்டி அல்லது பனைவெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். அதுவும் கூட அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வதும் சரியல்ல. மேலும் நீரிழிவுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தேன், கருப்பட்டி, பனைவெல்லம் சேர்த்துக்கொள்வது உகந்ததல்ல என்கின்றனர் நிபுணர்கள்

English summary

5 Most Dangerous Artificial Sweeteners | டீ, காபிக்கு செயற்கை சர்க்கரை யூஸ் பண்றீங்களா? இதைப் படிங்க !

This artificial sweetener contains the carcinogen methylene chloride, which is known to cause side effects such as headaches, nausea, depression, mentail confusion, cancer, visual disturbances as well as affecting the kidney and liver with long term usage.
Desktop Bottom Promotion