உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்..

Vitamin C Deficiency Symptoms In Tamil: உடல் சீராகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட வேண்டுமானால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்க வேண்டும். அப்படி உடலியக்கத்திற்கு மற்றும் செயல்பாட்டிற்கு வைட்டமின்கள் பல வழிகளில் உதவுகின்றன. முக்கியமாக வைட்டமின்கள் பல வழிகளில் உடலை பாதுகாத்து வருகின்றன. இந்த வைட்டமின்களில் பல உள்ளன. இந்த வைட்டமின்களில் குறைபாடு இருந்தால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

5 Common Symptoms Of Vitamin C Deficiency And How To Fix It

உதாரணமாக, ஒருவரது உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், உடல் பல அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கும். அதுவும் வைட்டமின்களிலேயே வைட்டமின் சி மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாகும். ஏனெனில் இது கொலாஜனை உருவாக்கும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்படும் மற்றும் உடல் இரும்பை உறிஞ்ச உதவும்.

முக்கியமாக இந்த வைட்டமினை உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாது என்பதால் இந்த சத்தை உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்டுகள் மூலமே பெற முடியும். இந்த வைட்டமின் சி குறைபாடு ஒருவரது உடலில் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தெரியும் என்பதையும், எந்த உணவுகள் மூலம் சரிசெய்யலாம் என்பதையும் காணலாம்.

1. ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்தக்கசிவு

வைட்டமின் சி உடலில் குறைவாக இருந்தால் தெரியக்கூடிய முதல் அறிகுறி ஈறுகளில் வீக்கமும், இரத்தக்கசிவும் தான். அதுவும் பற்களைத் துலக்கும் போது ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதைக் கண்டாலோ அல்லது ஈறுகள் வீங்கியிருப்பதைக் கண்டாலோ, அது ஸ்கர்வி எனப்படும் நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகாவிட்டால் பற்கள் பலவீனமடைந்துவிடும்.

2. அடிக்கடி நோய்வாய்ப்படுவது

நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வைட்டமின் சி தான் வலுப்படுத்துகிறது. அப்படிப்பட்ட வைட்டமின் சி குறைபாடு ஏற்பட்டால், அடிக்கடி சளி, இருமல் மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆளாகக்கூடும். எனவே நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதை கவனித்தால், அது வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.

3. உடல் சோர்வு மற்றும் பலவீனம்

நன்கு ஓய்வு எடுத்து, இரவு நல்ல தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் இந்த சத்து குறைவாக இருந்தால், அது உடலில் இரும்பை உறிஞ்சுவதைக் குறைத்து, அதன் விளைவாக இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இந்த இரத்த சோகையின் முதல் அறிகுறியே உடல் சோர்வும், பலவீனமும் தான். எனவே கவனமாக இருங்கள்.

4. சரும வறட்சி மற்றும் சுருக்கங்கள்

சருமத்தை இளமையாக வைத்துக் கொள்வதில் வைட்டமின் சி முக்கிய பங்கை வகிக்கிறது. எப்படியெனில் இது தான் சருமத்தில் கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த சத்து குறைபாடு ஏற்படும் போது, அது சருமத்தை அதிகமாக வறண்டு போக செய்வதோடு, சருமத்தில் சுருக்கத்தை உண்டாக்கும். மேலும் காயங்கள் ஏற்பட்டால், அது குணமடைய அதிக நேரம் எடுக்கும். எனவே இந்த அறிகுறிகளில் கவனமாக இருங்கள்.

5. மூட்டு வலி

உடலில் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், அது மூட்டு வலியையும், மூட்டுகளில் வீக்கத்தையும் உண்டாக்கும். ஏனெனில் கொலாஜன் உற்பத்திற்கு வைட்டமின் சி அவசியம். இந்நிலையில் இந்த குறைபாட்டினால் கொலாஜன் குறைந்து, மூட்டுக்களில் வலிமை குறைகிறது. எனவே நீங்கள் நடக்கும் போது சிரமத்தை சந்தித்தால், அது வைட்டமின் சியின் அறிகுறியாக இருக்கலாம். இப்படியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

வைட்டமின் சி குறைபாட்டை எப்படி சரிசெய்வது?

வைட்டமின் சி குறைபாட்டை சரிசெய்ய வேண்டுமானால், வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், கிவி, குடைமிளகாய், பச்சை காய்கறிகள் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்து வர வேண்டும். ஒருவர் ஒரு நாளைக்கு மட்டும் 75-90 மிகி வைட்டமின் சி பெற வேண்டியது அவசியம்.

ஒருவேளை அறிகுறிகள் தீவிரமாக இருந்தால், வைட்டமின் சி சப்ளிமெண்டுகளை மருத்துவரிடம் கேட்டு, அவரது பரிந்துரையின் பேரில் எடுக்கலாம். வைட்டமின் சி குறைபாட்டை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை சரிசெய்ய முயற்சித்தால், நிலைமை தீவிரமடைவதைத் தடுத்து பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, July 30, 2026, 13:51 [IST]
Desktop Bottom Promotion