குரு பெயர்ச்சி 2026: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா?

Athisara Guru Peyarchi Palan 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் வரை பயணிப்பார். சில சமயங்களில் அவர் அதிசாரமாக குறுகிய காலத்தில் ராசியை மாற்றுவார். அந்த வகையில் தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

Guru Peyarchi Palan 2026 Capricorn Aquarius Pisces Predictions By Astrologer Jeyalakshmi

குரு பகவானின் இந்த அதிசார பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும். இந்நிலையில் குரு பகவானின் பயணம் மற்றும் பார்வையால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்த குரு பகவான் அதிசாரமாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் பயணம் செய்யப் போகிறார். குருபகவான் உங்க ராசி நாதன் வீட்டில் தான் நீசம் அடைபவர். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பதற்கேற்ப கெட்ட இடத்திற்கு குரு வரும் பொழுது யோகத்தை எதிர்பார்க்கலாம்.

பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி இடையேயான உறவு பலப்படும். வேலையில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்துவார் என்பதால் கவனம் தேவை. எட்டாம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு 12 ஆம் வீட்டை குரு பார்க்க போவதால் இதுநாள் வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் விரைந்து நடைபெறும்.

அதேபோல தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தை தனாதிபதி குருவே பார்வையிடுவதால் பொருளாதார நிலை உயரும். பண வருமானம் கூடும்.சேமிப்புகள் உயரும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். பூர்விக சொத்துக்களை நல்ல விலைக்கு விற்பதால் லாபம் வரும்.

சுக ஸ்தானமான 4 ஆம் பாவத்தை குருபகவான் பார்வையிடுவதால், சிலர் அசையா சொத்துக்களை வாங்குவார்கள். புது வீடு கட்டி குடியேறுவார்கள். சிலருக்கு மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். புது முயற்சிகள் கை கூடும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் வரும். வியாழக்கிழமையன்று முருகப்பெருமானையும் குருபகவானயும் வணங்க நல்லதே நடக்கும்.

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாக கொண்ட கும்பம் ராசிக்காரர்களே! உங்க ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணித்த குருபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி பயணம் செய்கிறார்.

ஏழரை சனியின் தாக்கதால் கடந்த சில ஆண்டுகளாகவே படாத பாடு பட்டு சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று வேதனையை உருவாக்கி விட்டது. இனி விடிவுகாலம் வந்துவிட்டது. குரு பகவானின் பார்வையும் பயணமும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது.

குருபகவான் தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும். வேலை தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் கிடைக்கும். சேமிக்கும் அளவிற்கு பணம் சம்பாதிப்பீர்கள்.

உங்களுடைய ராசியை குரு நேரடியாக பார்வையிடுவதால், தேக பலம்,மனோ பலம் பண பலம் ஆகிய முன்றும் கிடைக்கும். மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால், உங்களின் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். பண வருமானம் நன்றாக இருக்கும். பிரதோஷ காலங்களில் நந்திக்கு அபிஷேகத்திற்கு சந்தனம், பால் வாங்கிக் கொடுக்க நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே! உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருந்த குருபகவான் ஆறாம் வீடான அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. சுபகிரகம் ஆறில் வரும் போது அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. உங்க ராசி அதிபதியும் பத்தாம் வீட்டு அதிபதியுமான குரு பகவான் ஆறாம் வீட்டிற்கு வருவது நன்மைதான்.

குரு பகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது படுவதால், செய்யும் தொழிலில் மாற்றம் ஏற்படலாம். படித்துவிட்டு வேலையில்லாமல் காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஜென்ம சனியால் இதுநாள் வரை தடைப்பட்ட காரியங்கள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும. பண வருமானம் வந்தாலும் சுப செலவுகளும் கூடவே வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

12 ஆம் பாவத்தை ராசி அதிபதி குரு பார்வையிடுவதால் உங்களின் தூக்க குறைபாடு நீங்கும். வருமானம் அதிகரித்தாலும் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டி நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.

உங்க ராசிக்கு 2 ஆம் இடத்தை குரு பார்வையிடுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள். பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாழக்கிழமை நாளில் சித்தர்கள் ஜீவசமாதிகளில் தரிசனம் செய்வது நல்லது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, October 28, 2026, 16:13 [IST]
Desktop Bottom Promotion