கோடையில் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாமா? எந்த சன்ஸ்க்ரீன் யூஸ் பண்ணணும்? - சரும நிபுணரின் அட்வைஸ்!

கோடைக்கால சரும பராமரிப்பு டிப்ஸ்களைக் குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் முருகுசுந்தரம் விரிவாக பதலளித்துள்ளார்.

கோடைக்காலம் ஆரம்பித்து, வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே, பலரும் தங்கள் சருமத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவோம். ஏனெனில் ஒருவரை அழகாக வெளிக்காட்டுவதில் சருமம் முக்கிய பங்கை வகிக்கிறது. இப்படிப்பட்ட சருமம் மற்ற பருவ காலங்களை விட கோடைக்காலத்தில் தான் அதிகமாக சேதமடையும். மேலும் நிறைய சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இவற்றைத் தடுப்பது எப்படி என்று நாம் அனைவருமே யோசிப்போம்.

Exclusive: Dermatologist Dr Murugusundram Shares Summer Skin Care Tips In Tamil

எனவே இந்த கோடைக்காலத்தில் எந்த மாதிரியான சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும், கோடையில் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தலாமா, சரும ஆரோக்கியத்திற்கு எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை ஒன் இந்தியா தமிழுக்கு தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் முருகுசுந்தரம் விரிவாக பதலளித்துள்ளார். அதை அறிய தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேள்வி #1

கேள்வி #1

கோடையில் ஒருவருக்கு இருப்பது எண்ணெய் பசை சருமமா, வறண்ட சருமமா என்பதை எப்படி அறிவது?

பதில்: ஒருவருக்கு எண்ணெய் பசை சருமம், வறண்ட சருமம் என்ற எதுவும் இல்லை. அனைவருக்குமே கம்பைண்டு சருமம் தான். நமது உடலில் தொப்புளுக்கு மேல் நிறைய எண்ணெய் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள் உள்ளன. ஒருவரது சருமம் வறண்டும், எண்ணெய் பசையுடனும் இருப்பது எல்லாம் நாம் இருக்கும் தட்பவெப்ப சூழலைப் பொறுத்தது. உதாரணமாக, சென்னை ஒரு கடலோர மாவட்டம். இப்பகுதியில் உள்ள காற்றில் ஈரப்பதம் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும். இவ்விரண்டும் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெரும்பாலும் எண்ணெய் பசை சருமமாகவே இருக்கும்.

கேள்வி #2

கேள்வி #2

கோடைக்காலத்திற்கு ஏற்ப சன்ஸ்க்ரீனை எப்படி தேர்வு செய்வது?

பதில்: சூரிய ஒளியில் நிறைய கதிர்கள் உள்ளன. அதில் புறஊதாக் கதிர்கள் தான் சருமத்திற்கு அதிக தீங்கை விளைவிக்கிறது. அதுவும் காலை 10 மணி முதல் மாலை 3 வரையில் வரும் புறஊதாக் கதிர்கள் சருமத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தும். எனவே இந்த நேரங்களில் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை தவிர்க்க முடியாதபட்சத்தில், சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் SPF-15-க்கு மேல் இருக்கும் சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். முக்கியமாக வெளியே செல்வதற்கு அரை மணிநேரத்திற்கு முன்னரே தடவ வேண்டும் மற்றும் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

கேள்வி #3

கேள்வி #3

மார்கெட்டில் ஜெல் பேஸ்டு, க்ரீம் பேஸ்டு என்று பல வகையான சன்ஸ்க்ரீன்கள் உள்ளன. இதில் எந்த வகை சன்ஸ்க்ரீன் சிறந்தது?

பதில்: சன்ஸ்க்ரீனை பயன்படுத்த நினைப்பவர்கள், தாங்கள் இருக்கும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். இதில் க்ரீம் பேஸ்டு சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்தினால், சருமமானது எண்ணெய் வழிந்தவாறு பொலிவிழந்து இருக்கும். எனவே வெப்பமான சூழலில் ஜெல் பேஸ்டு சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் மேட் பினிஷ் சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்தலாம். இந்த மேட் பினிஷ் சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துவதால், அது புறஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதோடு, சூரியனில் இருந்து வரும் விசிபிள் லைட்டினால் ஏற்படும் சேதத்தையும் தடுக்கும். எனவே SPF-15 உள்ள மேட் பினிஷ் சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது நல்லது.

கேள்வி #4

கேள்வி #4

சூரிய வெளிச்சத்தில் செல்லும் போது சருமம் வறண்டு போகும் என்பதால் மாய்ஸ்சுரைசரை சிலர் பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தலாமா? எந்த மாதிரியான மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தலாம்?

பதில்: சூரிய ஒளியில் செல்லும் போது சருமம் வறண்டு போகும் என்பதே ஒரு தவறான கருத்து. வெப்பமும், காற்றில் ஈரப்பதமும் உள்ள சூழலில் வியர்வை தான் அதிகம் வரும். சொல்லப்போனால், சருமம் வியர்வையால் ஈரப்பதத்துடன் தான் இருக்கும். இந்நிலையில் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. நாம் அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, இரண்டு வேளை குளித்து, சருமத்தில் வியர்வை தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சூரிய ஒளியால் சருமம் வறண்டு போகும் என்பது உண்மையல்ல.

கேள்வி #5

கேள்வி #5

வெயிலால் கருமையான சருமத்திற்கு பீலிங், ஃபேஷியல், டீ-டானிங் போன்ற சிகிச்சைகளை எடுப்பது நல்லதா?

பதில்: சருமம் கருமையாவதற்கு முன் அதை தடுக்க வேண்டும். சருமம் கருமையாவதற்கு சூரிய ஒளி மட்டும் காரணமாக இருக்க முடியாது. ஒருவேளை சருமம் கருமையானால், அதற்கு சூரிய ஒளியைத் தவிர, வேறு ஏதேனும் காரணமாக இருக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். ஏனெனில் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சருமம் எளிதில் கருமையாகலாம். வைட்டமின் குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு, புரோட்டீன் குறைபாடு, தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும் சருமம் கருமையாகலாம். எனவே எந்த காரணத்தினால் சருமம் கருமையானது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சைகளை எடுக்க வேண்டும். சரும கருமையைப் போக்க கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தினால், ஒவ்வாமையைத் தான் ஏற்படுத்துமே தவிர வேறு எதையும் செய்யாது. ஏனெனில் இந்த பாதிப்பு சருமத்தையும் தாண்டி உள்ளே ஏற்படக்கூடியது. அதற்கு உள்ளே தான் மருந்தை கொடுக்க வேண்டும். அதை விட்டு ஃபேஷியல், பீலிங், டீ-டானிங் போன்றவையெல்லாம் பலவிதமான ஒவ்வாமையை ஏற்படுத்தி, சருமத்தை இன்னமும் சேதப்படுத்தும்.

கேள்வி #6

கேள்வி #6

வெயில் காலத்தில் சருமத்திற்கு என்று டயட் ஏதேனும் உள்ளதா?

பதில்: உடல் நலத்தை வெளிப்படுத்துவது தான் தோல் நலம். உடல் நலம் மற்றும் மன நலம் சீராக இருந்தால், தோல், முடி, நகம் நலமாக இருக்கும். உடல் நலமாக இருக்க ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். மேலும் வைட்டமின்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். சருமத்திற்கான வைட்டமின்கள் என்றால், அது வைட்டமின் சி, ஈ, ஏ, டி, பி12 போன்றவை முக்கியமானவை. இதில் வைட்டமின் டி தோலால் மட்டும் உருவாக்கப்படக்கூடிய பிரத்யேகமான வைட்டமின். தோலுக்கு என்று தனி டயட் எதுவும் இல்லை. உடல் நலம் சார்ந்தது தான் தோல் நலம். உடல் நலத்திற்கான உணவுகளை உட்கொண்டால், தோல் நலமாக இருக்கும். இவ்வாறு தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் முருகுசுந்தரம் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, March 15, 2023, 18:49 [IST]
Desktop Bottom Promotion