வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?

Posted By:

Varalakshmi Vratham Special Coconut Payasam Recipe In Tamil: செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தேவியின் அருளைப் பெற பெண்கள் மேற்கொள்ளும் ஒரு விரதம் தான் வரலட்சுமி நோன்பு. பொதுவாக வரலட்சுமி நோன்பு ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரதம் கொண்டாடும் தினத்தில் மாறுபாடுகள் உண்டாகும்.

ஆனால் இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பானது ஆடி மாதத்தில் வருகிறது. அதுவும் இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 08 ஆம் தேதி வருகிறது. இந்த வரலட்சுமி நோன்பை மேற்கொள்வதன் மூலம் செல்வம், தானியம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், குழந்தைகள், வெற்றி, புகழ் போன்றவை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நோன்பு அன்று வீட்டில் பலவிதமான பாயாசம், வடை போன்ற பலவற்றை செய்து லட்சுமி தேவிக்கு படைத்து வழிபடுவார்கள்.

Varalakshmi Vratham Special Recipe How To Make a Coconut Payasam Recipe

இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பு அன்று ஸ்பெஷலாக ஒரு பாயாசம் செய்ய நினைத்தால், தேங்காய் பாயாசத்தை செய்யலாம். இந்த பாயாசம் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இந்த பாயாசத்தை அடிக்கடி செய்து குடித்து வந்தால், வயிற்றுப் புண்கள் குணமாகும், வயிறு குளிர்ச்சியாக இருக்கும், வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். குழந்தைகளுக்கு இந்த பாயாசத்தை அடிக்கடி செய்து கொடுப்பது மிகவும் நல்லது.

உங்களுக்கு தேங்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பால் - 2 கப்(1/2 லிட்டர்)+ 1/2 கப்
* முழு தேங்காய் - 1 (துருவியது)
* நைலான் ஜவ்வரிசி - 1/4 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 கப்
* துருவிய பாதாம் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு முழு தேங்காயை உடைத்து, அதன் ப்ரௌன் பகுதியை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து, பால் சூடானதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நைலான் ஜவ்வரிசியை சேர்த்து கிளறி, மூடி வைத்து, ஜவ்வரிசி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, ஜவ்வரிசி வெந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும். ஒருவேளை மிகவும் கெட்டியாகிவிட்டால், அதில் கூடுதலாக 1/2 கப் பாலை ஊற்றி கிளறி, ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு கொதி விட வேண்டும்.
* பின்பு பாயாசத்தை இறக்கிவிட்டு, அதில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து கிளறி, துருவிய பாதாமை சேர்த்து பிரட்டினால், சுவையான தேங்காய் பாயாசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, August 4, 2025, 19:30 [IST]
Desktop Bottom Promotion