வரகரிசியை வெச்சு ஒருவாட்டி இப்படி பொங்கல் செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்..

Posted By:

Varakarisi Pongal Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது பொங்கல் செய்து சாப்பிடுங்கள். பொதுவாக பொங்கலை பச்சரிசி கொண்டு தான் செய்வார்கள். ஆனால் சிறு தானியங்களைக் கொண்டும் பொங்கல் செய்யலாம் தெரியுமா?

அதுவும் வரகரிசியைக் கொண்டு பொங்கல் செய்யும் போது, அது சுவையாக இருப்பது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இதில் நார்ச்சத்து, புரோட்டீன் அதிகம் இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், வரகரிசி பொங்கலை அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்.

Varakarisi Pongal How To Make a Millet Pongal Recipe

உங்களுக்கு வரகரிசி பொங்கல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 1/2 கப்
* வரகரிசி - 1/2 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் வரகரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து நல்ல மணம் வந்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் வரகரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை வடிகட்டிவிட்டு, வரகரிசியை மட்டும் குக்கரில் போட்டு சிறிது நேரம் வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் 4 கப் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொங்கலுடன் சேர்த்து கிளறினால், சுவையான வரகரிசி பொங்கல் தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion