ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்..

Posted By:

Ramnad Style Mutton Kurma Recipe In Tamil: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே வீட்டில் மட்டனை எடுப்பீர்களா? அப்படி மட்டன் எடுத்தால் அதை ஒரே சுவையில் மட்டன் குழம்பு செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை ராம்நாடு ஸ்டைலில் மட்டன் குருமா செய்யுங்கள். இந்த மட்டன் குருமா இட்லி, சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த குருமா சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

Ramnad Style Mutton Kurma How To Make Mutton Kurma Recipe

உங்களுக்கு இந்த ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/2 மூடி (நறுக்கியது)
* சோம்பு - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மட்டன் - 3/4 கிலோ
* மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மட்டன் மசாலா - 1 ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* தக்காளி - 2 (நறுக்கியது)
* அரைத்த மசாலா
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, மிளகு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கல்பாசியை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வத்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மட்டனை கழுவி சேர்த்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், குழம்பு மிளகாய் தூள், மட்டன் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட்டு, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, நறுக்கிய தக்காளியை சேர்த்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 8-9 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, September 13, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion