1 கப் ராகி மாவு இருந்தா, காலையில் இந்த டிபனை ஒருடைம் செஞ்சு பாருங்க.. செம ருசியா இருக்கும்...

Posted By:

Ragi Upma Recipe In Tamil: எப்பவும் காலையில் உங்கள் வீட்டில் இட்லி தோசை தான் செய்வீர்களா? இப்படி செய்து உங்கள் வீட்டில் உள்ளோருக்கே காலை டிபன் சாப்பிட பிடிக்கலையா? உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகியைக் கொண்டு ஒரு புதுமையான டிபனை முயற்சித்துப் பாருங்கள்.

பொதுவாக ராகி மாவைக் கொண்டு களி, கூழ் என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் ராகி மாவைக் கொண்டு உப்புமாவை ஒருமுறை செய்து பாருங்கள். இந்த உப்புமா ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

Ragi Upma How To Make a Ragi Upma Recipe

உங்களுக்கு ராகி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* ரவை - 1 கப்
* ராகி மாவு - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்த பொரிய விட வேண்டும்.
* பின் அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து, லேசாக நிறம் மாறத் தொடங்கும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து லேசாக வதக்கி, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, 1 டீஸ்பூன் உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 கப் ரவையை சேர்த்து அப்படியே நல்ல மணம் வந்து வறுபடும் வரை கிளறி விட்டு வறுக்க வேண்டும்.
* ரவை நன்கு வறுபட்டதும், அதில் 1 கப் ராகி மாவை சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்கு வறுத்து விட வேண்டும்.
* பின்பு அதில் 4 கப் அளவு தண்ணீரை ஊற்றி கிளறி விட வேண்டும். அப்படி கிளறி விடும் போது குறைவான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். ரவையும், ராகிமாவும் நன்கு வறுபட்டு இருந்தால், நீர் ஊற்றும் போது கட்டி சேராமல் இருக்கும். இல்லாவிட்டால் கட்டிகளாக சேரும். எனவே ரவையையும், ராகி மாவையும் நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
* பொதுவாக ரவை வேகமாக வெந்துவிடும். ஆனால் ராகி மாவு வேக நிறைய நேரம் எடுக்கும். எனவே மூடி வைத்து, ஒரு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து உப்புமாவை நன்கு கிளறி விட வேண்டும். பின் மீண்டும் மூடி வைத்து, ஒரு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மூடியைத் திறந்து கிளறி விடும் போது, உப்புமா வாணலியில் ஒட்டாமல் நன்கு திரண்டு வரும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான ராகி உப்புமா தயார்.

Image Courtesy: Apoorvaa's Virundu

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 4, 2024, 6:39 [IST]
Desktop Bottom Promotion