உருளைக்கிழங்கு வாங்குனா இந்த மாதிரி பஞ்சாபி ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தரமா இருக்கும்

Posted By:

Punjabi Style Potato Fry Recipe in Tamil: சில காய்கறிகள் அனைவருக்குமே மிகவும் பிடித்தவையாக இருக்கும். அதில் முக்கியமானது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை பொரியல் செய்தாலும் சரி, குழம்பு வைத்தாலும் சரி வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு உருளைக்கிழங்கு அனைவரின் சமையலறையையும் ஆக்கிரமித்துள்ளது. சிக்கனைப் போலவே உருளைக்கிழங்கையும் பல வழிகளில் சமைக்கலாம். அப்படி ஒரு தனித்துவமான உருளைக்கிழங்கு ரெசிபிதான் பஞ்சாபி சீரக உருளைக்கிழங்கு வறுவல்.

Punjabi Style Potato Fry Recipe How to Make at Home in Tamil

இது ரொம்ப கஷ்டமான ரெசிபி அல்ல. நம்ம வீட்ல எல்லோருக்கும் பிடிக்கிற உருளைக்கிழங்கு வறுவல் தான். ஆனா அதை பஞ்சாபி மக்கள் சேர்க்கிற தனித்துவமான மசாலாவை சேர்த்து செஞ்சா பஞ்சாபி சீரக உருளைக்கிழங்கு வறுவல். இந்த உருளைக்கிழங்கு வறுவல் செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் சுவையும் வித்தியாசமானதாக இருக்கும். இது சாதத்துக்கு மட்டுமின்றி சப்பாத்தி, பூரிக்கும் சூப்பர் சைடிஷா இருக்கும்.

உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாபி உருளைக்கிழங்கு வறுவலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- உருளைக்கிழங்கு - ½ கிலோ
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 4 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த சிவப்பு மிளகாய் - 4
- கொத்தமல்லி விதைகள் - 4 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- மிளகாய்த்தூள் - 1½ டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மாங்காய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழம் - 1
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:

- சிறிய உருளைக்கிழங்கை மண் இல்லாமல் அலசி தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கு நன்கு வேகும் வரை வைக்கவும்.
- அல்லது குக்கரில் சேர்த்து 5 முதல் 6 விசில் வரும் வரை வைக்கவும்.
- அதிகமாக வெந்து உருளைக்கிழங்கு உதிரும் படி இருக்க கூடாது. அவற்றின் வடிவத்தை இழக்காமலும் இருக்க வேண்டும்.
- சிறிய உருளைக்கிழங்குக்கு பதில் சாதாரண உருளைக்கிழங்குகளை சிறு துண்டுகளாக நறுக்கியும் பயன்படுத்தலாம்.
- எலுமிச்சை பழத்தை நறுக்கி பிழிந்து சாறு எடுத்து விதையை நீக்கி வைக்கவும்.
- கொத்தமல்லி இலைகளை மண் இல்லாமல் சுத்தமாக அலசி பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
- ஒரு உலர்ந்த மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி விதை மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.
- பச்சை மிளகாயை கழுவி காம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- உருளைக்கிழங்கு வெந்ததும் தோலுரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிய விடவும். சீரகம் கருகி விடாமல் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
- அதனுடன் அரைத்து வைத்த கொத்தமல்லி விதை மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- அதனுடன் சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், கொத்தமல்லி தூள், காய்ந்த மாங்காய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி பாத்திரத்தை மூடி, மிதமான தீயில் 10-12 நிமிடங்கள் வேக விடவும்.
- பின் அடுப்பை அணைத்து, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறை சேர்த்து கிளறவும்.
- கடைசியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் சுவையான பஞ்சாபி ஸ்டைல் உருளைக்கிழங்கு ரெடி!
- இது பருப்பு, சாதம் அல்லது சப்பாத்திக்கு ஏற்ற அருமையான சைடு-டிஷ்ஷாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 26, 2026, 17:11 [IST]
Desktop Bottom Promotion