நெல்லை ஸ்டைல் அஞ்சு காய் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும்

Posted By:

Nellai Poricha Kuzhambu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன குழம்பு வைப்பது என முடிவெடுப்பது சிரமமாக உள்ளதா? ஒரே மாதிரியான சாம்பார் அல்லது புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? ஏதாவது வித்தியாசமாக அதேசமயம் சுவையான ஒரு குழம்பை செய்ய ஆசைப்படுறீங்களா? அப்படியானால் நெல்லை ஸ்டைல் பல காய் பொரிச்ச குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பை செய்தால், இட்லி, சாதம், சப்பாத்தி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

Nellai Poricha Kuzhambu Recipe How to Make at Home in Tamil

இந்த நெல்லை ஸ்டைல் பொரிச்ச குழம்பு செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். இந்த குழம்பில் பல காய்கறிகள் சேர்த்து செய்யப்படுவதால் இது சுவையானது மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த மாதிரி குழம்பு வைத்து கொடுத்தால் காய்கறி பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு நெல்லை ஸ்டைல் பல காய் பொரிச்ச குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லை ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- சிறிய எலுமிச்சை அளவு புளி
- ½ கப் துவரம் பருப்பு
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1½ ஸ்பூன் உப்பு

காய்கறிகள்:

- ½ கப் வாழைக்காய்
- 1 உருளைக்கிழங்கு
- 1/4 கப் முருங்கைக்காய்
- 1 கத்தரிக்காய்
- 1 கேரட்

அரைக்கத் தேவையானவை:

- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் மல்லி விதைகள்
- 3 வர மிளகாய்
- 1 ஸ்பூன் மிளகு

தாளிக்க:

- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- ¼ ஸ்பூன் பெருங்காயம்

செய்முறை:

- துவரம் பருப்பைக் கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும். பருப்பு வெந்தது அதை மசித்து தனியே எடுத்து வைக்கவும்.

- புளியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, அதன் சாற்றைப் பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

- காய்கறிகளைச் சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும். உளுத்தம் பருப்பு, மல்லி விதைகள், காய்ந்த மிளகாய் மற்றும் மிளகு சேர்த்து, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- பருப்பு பொன்னிறமாக மாறியதும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, காய்கறிகள் ஓரளவு வேகும் வரை சமைக்கவும்.

- காய்கறிகள் ஓரளவு வெந்ததும், புளிக்கரைசல், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். புளியின் பச்சை வாசனை நீங்கும் வரை, புளிக்கரைசலை 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

- அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து, குழம்புடன் நன்கு கலந்து வேகவிடவும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

- பின்னர் வேகவைத்து மசித்து வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து குழம்பின் அடர்த்தியைச் சரிசெய்து கொள்ளவும். குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். கடுகு சேர்த்து அது வெடிக்கும் வரை காத்திருக்கவும். பின் கடலைப்பருப்பைச் சேர்த்து, அது லேசான பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.

- அதனுடன் கறிவேப்பிலை, துருவிய தேங்காய் மற்றும் பெருங்காயம் சேர்த்து, தேங்காய் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இந்தத் தாளிப்பை குழம்பில் சேர்த்து நன்கு கிளறவும்.

- சுவையான ஐந்து காய் பொரிச்ச குழம்பை, சூடான சாதத்துடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துப் பரிமாறுங்கள்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 26, 2026, 13:40 [IST]
Desktop Bottom Promotion