பீர்க்கங்காய் வெச்சு இப்படி ஒருடைம் பருப்பு கறி செய்யுங்க.. சாதம், இட்லி, தோசைக்கும் செமயா இருக்கும்..

Posted By:

Peerkangai Paruppu Curry Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் எப்போதும் ஒரே விதமான காய்கறிகளை தான் சாப்பிடுவார்களா? பீர்க்கங்காய் வாங்கினால் தொடக்கூடமாட்டார்களா? அப்படியானால் பீர்க்கங்காயை பொரியல், கூட்டு என்று செய்யாமல் ஒருமுறை இந்த பீர்க்கங்காய் பருப்பு கறியை செய்யுங்கள். இந்த கறி இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த பக்குவத்தில் பருப்பு கறி செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Peerkangai Paruppu Curry How To Make Ridge Gourd Paruppu Curry

உங்களுக்கு பீர்க்கங்காய் பருப்பு கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் பருப்பு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பிஞ்சு பீர்க்கங்காய் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (தட்டியது)

செய்முறை:

* முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 1 கப் துவரம் பருப்பு மற்றும் 1/2 கப் பாசிப்பருப்பை சேர்த்து, நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2 கப் நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, 15-20 நிமிடம் பருப்பை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய பீர்க்கங்காய், தக்காளி, உடைத்த 5 பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, 10 நிமிடம் மீண்டும் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பருப்பும், காய்கறியும் நன்கு வெந்ததும், மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தட்டி வைத்துள்ள 8 பல் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, அதை அப்படியே கொதித்துக் கொண்டிருக்கும் பருப்புன் சேர்த்து கலந்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், பீர்க்கங்காய் பருப்பு கறி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 13, 2026, 13:56 [IST]
Desktop Bottom Promotion