இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..

Posted By:

Thakkali Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு அட்டகாசமான சுவையைக் கொண்ட, அதே சமயம் செய்வதற்கு ஈஸியாக இருக்கும் வகையில் ஒரு சுவையான தக்காளி குருமாவை செய்யுங்கள்.

இந்த தக்காளி குருமா பாயா சுவையில் இருக்கும் என்பதால் அனைவருமே கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த தக்காளி குருமா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, இட்லியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

Paya Taste Thakkali Kurma How To Make a Tomato Kurma Recipe

உங்களுக்கு தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 1/2 கப்

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 4
* முந்திரி - 10
* பூண்டு - 6-7
* இஞ்சி - 1 துண்டு
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், முந்திரி, பூண்டு, இஞ்சி, மிளகு, சோம்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பெரிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பு தூவி, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தக்காளி குருமா தயார்.

Image Courtesy: Kamala's Corner

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 19, 2024, 7:11 [IST]
Desktop Bottom Promotion