பூரி, சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.. சுவையான... நீலகிரி காய்கறி குருமா

Posted By:

Nilgiri Kai Kari Kurma: உங்கள் வீட்டில் தினமும் இரவு சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று மதியானத்தில் இருந்தே யோசிப்பீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனெனில் இன்று நாம் காய்கறிகளை கொண்டு செய்யக்கூடிய நீலகிரி ஸ்டைல் குருமாவை பற்றி தான். இந்த நீலகிரி காய்கறி குருமா சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Nilgiri Kai Kari Kurma Recipe In Tamil

முக்கியமாக இந்த குருமாவில் காய்கறிகள் இருப்பதால், இது மிகவும் சத்தானது. மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குறிப்பாக இந்த குருமா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு நீலகிரி காய்கறி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நீலகிரி காய்கறி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பச்சை விழுதிற்கு...

* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* பச்சை மிளகாய் - 5
* இஞ்சி - 1/2 இன்ச் (தோலுரித்து துண்டுகளாக்கவும்)
* பூண்டு - 5 பல்
* தண்ணீர் - 1/2 கப்

வெள்ளை விழுதிற்கு...

* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 15
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்

பிற பொருட்கள்...

* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* உருளைக்கிழங்கு - 1/2 கப் (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* கேரட் - 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* பீன்ஸ் - 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* காலிஃப்ளவர் - 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* தயிர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் பச்சை விழுதிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கசகசா மற்றும் முந்திரியை 1/2 கப் நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காயை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள பச்சை விழுதை சேர்த்து உப்பு தூவி ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் ஆனதும், அதில் தயிர் மற்றும் அரைத்து வைத்துள்ள வெள்ளை விழுதை சேர்த்து கிளறி, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 5-6 நிமிடம் குருமாவை கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நீலகிரி காய்கறி குருமா தயார்.

Image Courtesy: kannammacooks

[ of 5 - Users]
Desktop Bottom Promotion