வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும்

Posted By:

Veg Kolhapuri Recpe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி அல்லது பூரி செய்வீர்களா? அதற்கு வழக்கமான உருளைக்கிழங்கு குருமா இல்லாமல் ஒரு வித்தியாசமான சைடிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் சில காய்கறிகள் இருந்தால், சுவையான வெஜ் கோலாப்பூரி மசாலாவை செய்து கொடுங்கள்.

Veg Kolhapuri Recipe How to Make at Home in Tamil

இந்த கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை, புரோட்டா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த வெஜ் கோலாப்பூரி மசாலா வழக்கமான குருமா போல இருக்காது, இதன் செய்முறையே கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். இந்த மசாலா நார்த் இந்தியாவில் மிகவும் பிரபலமானதாகும். நம்மூரிலும் பல ரெஸ்டாரண்ட் மற்றும் தாபாக்களில் இது பிரபலமான உணவாகும். ஒருமுறை இந்த சைடிஷை செய்து விட்டால் அதன்பிறகு அடிக்கடி இதைத்தான் செய்வார்கள்.

உங்களுக்கு வெஜ் கோலாப்பூரி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைக்க வேண்டிய காய்கறிகள்:

- 1 உருளைக்கிழங்கு, பெரிய துண்டுகளாக நறுக்கியது
- 1 சிறிய கேரட், பெரிய துண்டுகளாக நறுக்கியது
- 5 பீன்ஸ், நறுக்கியது
- 1 கப் காலிஃபிளவர்
- 2 கப் தண்ணீர்
- ½ டீஸ்பூன் உப்பு

மசாலா தயாரிக்க:

- 1 ஸ்பூன் எள்
- 1 டீஸ்பூன் கசகசா
- ½ ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் தனியா
- 1 இன்ச் பட்டை
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 5 மிளகு
- 3 காஷ்மீரி சிவப்பு மிளகாய்
- 2 டீஸ்பூன் தேங்காய்

பிற பொருட்கள்:

- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 நடுத்தர அளவு வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 2 தக்காளி, பொடியாக நறுக்கியது
- ½ குடைமிளகாய், சதுரத் துண்டுகளாக நறுக்கியது
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 கப் தண்ணீர்
- 3 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள், பொடியாக நறுக்கியது

செய்முறை:

- முதலில் காய்கறிகளைச் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.

- ஒரு கடாயில் எள், கசகசா, மல்லி விதைகள் மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும்.

- அத்துடன் பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, வர மிளகாய் மற்றும் தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து வறுக்கவும்.

- இவை அனைத்தையும் வறுத்து, ஆற வைத்து தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.

- ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

- வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதன்பின் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

- தக்காளி குழையும் அளவு வெந்ததும் நறுக்கிய குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

- அதனுடன் தயார் செய்து வைத்துள்ள மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பையும் சேர்க்கவும்.

- மசாலாவிலிருந்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்.

- பிறகு வேகவைத்த காய்கறிகள், தேவையான அளவு தண்ணீர் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.

- மூடி வைத்து, 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேகவிடவும்.

- மசாலா நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்தால் சுவையான வெஜ் கோலாப்பூரி மசாலா ரெடி. இதை சூடான சப்பாத்தி, பூரி அல்லது பரோட்டவுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, August 15, 2026, 12:19 [IST]
Desktop Bottom Promotion