1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..

Posted By:

Mutton Biryani In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்குமா? அதுவும் மட்டன் பிரியாணியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? நீங்கள் பிரியாணி செய்தால், எப்போதும் ஒரே மாதிரி தான் பிரியாணி செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் பிரியாணி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இப்படி மசாலா அரைத்து பிரியாணி செய்யுங்கள். இந்த பிரியாணி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

Mutton Biryani How To Make a Delicious Mutton Biryani

உங்களுக்கு இந்த மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சீரக சம்பா அரிசி - 1 டம்ளர் (ஊற வைத்துக் கொள்ளவும்)

அரைத்து பொடி செய்வதற்கு...

* ஏலக்காய் - 3
* கிராம்பு - 4
* பட்டை - 3 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* ஜாவித்திரி - 1
* பிரியாணி இலை - 2
* கல்பாசி - சிறிது
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 8

மசாலா விழுது அரைப்பதற்கு..

* பச்சை மிளகாய் - 6
* பெரிய வெங்காயம் - 2
* இஞ்சி - 1 பெரிய துண்டு
* பூண்டு - 8 பல்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி

மட்டன் வேக வைப்பதற்கு...

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* அரைத்த பேஸ்ட்
* புளிப்பில்லாத தயிர் - 1/4 கப்
* அரைத்த மசாலா பவுடர்
* மட்டன் - 1/2 கிலோ
* தண்ணீர் - 3/4 டம்ளர்

பிற பொருட்கள்...

* வேக வைத்த மட்டன்
* தண்ணீர் - 1 டம்ளர்
* ஊற வைத்த சீரக சம்பா அரிசி
* எலுமிச்சை - 1/2

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்ககாய், அன்னாசிப்பூ, ஜாவித்திரி, பிரியாணி இலை, கல்பாசி, மல்லி, சீரகம், மிளகு, சோம்பு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த பொடியாக தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானதும், அரைத்த பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, அரைத்த மசாலா பவுடரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1/2 கிலோ மட்டனை கழுவி சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட்டு, 3/4 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி வைத்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதை பிரியாணி பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் 1 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்த சீரக சம்பா அரிசியை கழுவி சேர்த்து, பாதி எலுமிச்சை சாற்றினை பிழிந்து கிளறி, மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து கிளறி விட்டு, மீண்டும் மூடி வைத்து, அதன் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்து, குறைவான தீயில் வைத்து 20 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்துவிட்டு, 45 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், சுவையான மட்டன் பிரியாணி தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, August 23, 2026, 14:01 [IST]
q
Desktop Bottom Promotion