காளானும், உருளைக்கிழங்கும் இருந்தா இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்

Posted By:

Mushroom Potato Masala Recipe in Tamil: சில உணவுகள் அனைவருக்கும் பிடித்தவையாக இருக்கும். அதற்குக் காரணம் அவற்றின் சுவையும், அவை சமைக்கப்படும் முறைகளும்தான். அப்படியொரு உணவுப்பொருள்தான் காளான். ஏனெனில் சிக்கன், முட்டை போல காளானையும் நூற்றுக்கணக்கான வழிகளில் சமைக்கலாம். உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை வாங்கி செய்வீர்களா?

Mushroom Potato Masala Recipe How to Make at Home in Tamil

காளானை ஒரே மாதிரி சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை காளான் வாங்கும்போது அதை வழக்கம்போல செய்யாம உருளைக்கிழங்கோட சேர்த்து நார்த் இந்தியன் ஸ்டைலில் ஒரு மசாலா செஞ்சு பாருங்க. இந்த காளான் மசாலா செய்வதற்கு மிகவும் எளிதானது அதேசமயம் மிகவும் சுவையானதும் கூட. இந்த காளான் உருளைக்கிழங்கு மசாலா தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்துடனும் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு நார்த் இந்தியன் ஸ்டைல் காளான் உருளைக்கிழங்கு மசாலா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்ய வேண்டுமென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- நடுத்தர அளவுள்ள 2 உருளைக்கிழங்கு
- 200 கிராம் காளான்கள்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 பிரியாணி இலை
- ½ ஸ்பூன் சீரகம்
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்கள்
- 1 ½ ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 2 நறுக்கிய தக்காளி
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
-10 முந்திரி பருப்புகள்
- ¼ ஸ்பூன் கசூரி மேத்தி
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகள்
- தேவையான அளவு தண்ணீர்

செய்முறை:

- நறுக்கிய தக்காளியுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து சேர்த்து ஒரு ஜாரில் போட்டு, மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதைத் தனியே எடுத்து வைக்கவும்.

- வெங்காயத்தைக் கழுவி மிக மென்மையாக நறுக்கிக் கொள்ளவும், பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். காளானை நன்கு கழுவி தேவைப்பட்ட வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.

- ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும்.

- நறுக்கிய காளான்களை எண்ணெயில் சேர்த்து, மிதமான தீயில் அவை சுருங்கும் வரை வதக்கவும். பின்னர் காளானை தனியாக எடுத்து வைக்கவும்.

- அதே வாணலியில் மேலும் 1 ஸ்பூன் அளவு எண்ணெயைச் சேர்க்கவும்.

- சீரகம் மற்றும் பிரியாணி இலையைச் சேர்த்து தாளிக்கவும்.

- சீரகம் பொரியத் தொடங்கியதும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.

- மிதமான தீயில் வைத்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- வெங்காயம் வதங்கும் நேரத்தில், உருளைக்கிழங்கைக் கழுவி, தோல் சீவி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

- வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- பின்னர் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து, அதிலுள்ள ஈரப்பதம் முழுமையாக வற்றும் வரை வதக்கவும்.

- அதன்பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து, 2 நிமிடங்கள் வதக்கவும்.

- பின்னர் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்து, 2 நிமிடங்கள் வதக்கவும்.

- கிரேவிக்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். மூடி வைத்து, உருளைக்கிழங்கு வேகும் வரை சமைக்கவும்.

- பின்னர் காளான் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து, கிரேவி சரியான பதத்திற்கு வரும் வரை மூடி வைத்து கொதிக்க விடவும்.

- உப்பு மற்றும் காரத்தைச் சரிபார்த்து, தேவைக்கேற்பச் சரிசெய்து கிரேவி தொக்கு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

- கொத்தமல்லி இலைகளைத் தூவி, பரிமாறும் வரை மூடி வைக்கவும்.

- அவ்வளவுதான் அட்டகாசமான காளான்-உருளைக்கிழங்கு மசாலா ரெடி. இதை சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 19, 2026, 13:23 [IST]
Desktop Bottom Promotion