தோசை மாவு இல்லாத நேரத்துல 1 கப் மீல் மேக்கர் வெச்சு இப்படி தோசை சுடுங்க.. மொறுமொறுன்னு செமயா இருக்கும்..

Posted By:

Meal Maker Dosa Recipe In Tamil: காலை வேளையில் தோசை சுட மாவு இல்லையா? காலையில் டக்கென்று என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் மீல் மேக்கர் இருக்கிறதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரை வைத்து ஒரு அட்டகாசமான சுவையில் மொறுமொறுவென்று தோசையை சுட்டு சாப்பிடுங்கள்.

இந்த மீல் மேக்கர் தோசை ரவா தோசையைப் போன்றே நன்கு மொறுமொறுப்பாக இருக்கும். மேலும் இது காலையில் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். முக்கியமாக இந்த தோசைக்கு தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

Meal Maker Dosa How To Make a Meal Maker Dosa Recipe

உங்களுக்கு மீல்மேக்கர் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மீல் மேக்கர் - 1 கப்
* காஷ்மீரி மிளகாய் - 3
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - சிறு துண்டு
* கோதுமை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கசூரி மெத்தி - 1/2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 3 கப்
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் மீல் மேக்கர், காஷ்மீரி வரமிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் மீல் மேக்கர், வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, ரவை மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் கோதுமை மாவு, சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு, கசூரி மெத்தி, கொத்தமல்லி மற்றும் நீரை ஊற்றி நன்கு தோசை மாவு பதத்திற்கு, சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ரவா தோசையை விடுவது போன்று ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான மீல்மேக்கர் தோசை தயார்.

Image Courtesy: Smitha Kalluraya

[ of 5 - Users]
Desktop Bottom Promotion