ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..

Posted By:

Lunch Box Special Soya Rice Recipe In Tamil: காலையில் ஸ்கூலுக்கு என்ன சமைத்து கொடுப்பது என்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் பிள்ளைகளுக்கு வெரைட்டி ரைஸ் என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி ஸ்கூலுக்கு வெரைட்டி ரைஸ் தான் செய்து கொடுப்பீர்களா? எப்போதும் ஒரே வெரைட்டி ரைஸ் செய்து, வரவர உங்கள் பிள்ளைகள் சரியாக சாப்பிடுவது இல்லையா? உங்கள் பிள்ளைகளுக்கு மீல் மேக்கர் என்றால் பிடிக்குமா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு ரைஸ் செய்து கொடுங்கள். இந்த மீல் மேக்கர் ரைஸ் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, புரோட்டீன் நிறைந்தது என்பதால் சத்தானதும் கூட.

Lunch Box Recipes How To Make Soya Rice Recipe

உங்களுக்கு இந்த சோயா ரைஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோயா ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* சோயா/மீல் மேக்கர் - 2 கப்
* உப்பு - சிறிது

மசாலா அரைப்பதற்கு...

* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1 துண்டு
* புளி - சிறிய துண்டு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த மசாலா
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
* வேக வைத்த சோயா
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பாசுமதி அரிசி சாதம் - 1 கப் அல்லது 250 மிலி

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் சற்று அதிகமாக நீரை எடுத்துக் கொண்டு, அதை அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 கப் சோயாவை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி நீரை வடிகட்டிவிட்டு குளிர வைக்க வேண்டும்.
* சோயா குளிர்ந்த பின், அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் மிளகு, சோம்பு, பூண்டு, இஞ்சி, புளி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து சில நொடிகள் வதக்கி, பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த சோயாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 2 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து மீண்டும் கிளறி விட்டு, பின் வேக வைத்த பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* சாதத்தை நன்கு கிளறி விட்ட பின் உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான சோயா ரைஸ் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 6, 2026, 20:51 [IST]
Desktop Bottom Promotion