உடலுக்கு வலு சேர்க்கும் குதிரைவாலி உப்புமா - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Kuthiraivali Upma Recipe In Tamil: நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் காலை வேளையில் உடற்பயிற்சிக்கு பின் நல்ல சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். அதுவும் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், காலை உணவில் சிறுதானியங்களை சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது எளிதில் ஜீரணமாகக்கூடியது. இதனால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும்.

சிறுதானியங்களில் பல உள்ளன. அதில் ஒன்று தான் குதிரைவாலி. இந்த குதிரைவாலி அரிசியைக் கொண்டு, கஞ்சி செய்வதற்கு பதிலாக, உப்புமா செய்து சாப்பிட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும். இதுவரை உங்களுக்கு உப்புமா பிடிக்காமல் இருந்தால், குதிரைவாலி அரிசியைக் கொண்டு உப்புமா செய்து சுவைத்து பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த உப்புமாவிற்கு தேங்காய் சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

Kuthiraivali Upma How To Make a Barnyard Millet Upma Recipe

உங்களுக்கு குதிரைவாலி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குதிரைவாலி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* குதிரைவாலி அரிசி - 1 டம்ளர்
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 டம்ளர்
* உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் குதிரைவாலி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 கொத்து கறிவேப்பிலை மற்றும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் 1 பச்சை மிளகாயையும் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 3 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க தொடங்கியதும், ஊற வைத்த குதிரைவாலி அரிசியை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறி, மூடி வைத்து உயர் தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, ஒருமுறை கிளறி விட்டு, பின் மீண்டும் மூடி வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான குதிரைவாலி உப்புமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, April 24, 2025, 7:30 [IST]
Desktop Bottom Promotion