கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உப்பு சீடை - இந்த சீடை வெடிக்காமல் மொறுமொறு-ன்னு வர இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

Posted By:

Krishna Jayanthi Special Uppu Seedai Recipe In Tamil: கிருஷ்ணர் பிறந்த கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. இந்த நாளில் கிருஷ்ணருக்கு பலவிதமான பலகாரங்களை செய்து படைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 16 ஆம் தேதி வருகிறது.

இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை நீங்களும் உங்கள் வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தவறாமல் உப்பு சீடை செய்யுங்கள். கிருஷ்ணருக்கு சீடை என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் சீடை சுட பலரும் அஞ்சுவார்கள்.

Krishna Jayanthi Special Recipe How To Make a Uppu Seedai

ஏனெனில் சீடையை சரியான பக்குவத்தில் செய்யாவிட்டால், வெடிக்கத் தொடங்கும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பின்பற்றி சீடையை செய்தால், சீடை வெடிக்காமலும் இருக்கும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பக்குவத்தில் சீடை செய்தால், 20 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு உப்பு சீடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உப்பு சீடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முழு உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* அரிசி மாவு - 1 1/2 கப்
* கல் உப்பு - 1 1/4
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* வறுத்த எள்ளு விதைகள் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெண்ணெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு நிறம் மாற வறுத்து, ஒரு தட்டில் போட்டு நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் அரிசி மாவை சேர்த்து, 10 நிமிடம் நன்கு வறுத்து இறக்கி, அதையும் ஒரு தட்டில் போட்டு நன்கு குளிர வைக்க வேண்டும். மாவை நன்கு ஈரப்பதமில்லாதவாறு வறுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சீடை வெடிக்கும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த உளுத்தம் பருப்பு மாவை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் கல் உப்பை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, அத்துடன் 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து, உப்பை கரைக்க வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவை சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் கல் உப்பு ஊற வைத்த நீரை வடிகட்டி சேர்த்து, அத்துடன் வறுத்த எள்ளு விதைகள், சீரகம், வெண்ணெய் சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதிகமாக நீரை ஊற்றி விட வேண்டாம். இல்லாவிட்டால், சீடை வெடிக்கும்.
* மாவை நன்கு மென்மையாக பிசைந்த பின், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டிக் கொள்ள வேண்டும்.
* அதுவும் உருட்டும் போது, அழுத்தி உருட்டாமல், மூன்று விரல்களால் உருட்டி வெள்ளைத் துணியில் போட்டு, சீடை வெடிக்காமல் இருக்க, டூத்பிக் குச்சியால் ஒரு துளையிடுங்கள். பின் 1/2 மணிநேரம் காய வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், குறைவான தீயில் வைத்து, பின் சீடைகளைப் போட்டு பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான உப்பு சீடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, August 13, 2025, 18:49 [IST]
Desktop Bottom Promotion