கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..

Posted By:

Karuveppilai Chutney Recipe In Tamil: பொதுவாக உணவில் கறிவேப்பிலை இருந்தாலே அதை ஒதுக்கி வைப்போர் அதிகம். ஆனால் அந்த கறிவேப்பிலை உணவுக்கு வெறும் சுவையையும், மணத்தையும் கொடுப்பது மட்டுமின்றி, ஏராளமான நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. முக்கியமாக கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட கறிவேப்பிலையை தினசரி சமையலில் தாளிக்க பயன்படுத்துவது மட்டுமின்றி, அதைக் கொண்டு அவ்வப்போது சட்னி செய்து சாப்பிட்டால் உடலுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்கும்.

Karuveppilai Chutney How To Make Curry Leaves Peanut Chutney

உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகமாக இருந்தால், அப்போது அத்துடன் வேர்க்கடலையை சேர்த்து சட்னி செய்து பாருங்கள். சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். இந்த ஸ்டைலில் கறிவேப்பிலை சட்னியை செய்யும் போது, கறிவேப்பிலை பிடிக்காது என்பவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/4 ஸ்பூன்
* வேர்க்கடலை - 1 கப்
* நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
* புளி - 1 சிறிய துண்டு
* பூண்டு - 3 பல்
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 2
* பெருங்காயம் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி ஜாரில் சேர்க்க வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து சிறிது நேரம் வறுத்து, அதையும் ஜாரில் சேர்க்க வேண்டும்.
* மீண்டும் அந்த வாணலியை அடுப்பல் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 சிறிய துண்டு புளி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 2 பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர வைத்த பொருட்களை ஜாரில் உள்ள பொருட்களுடன் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, August 19, 2026, 7:07 [IST]
Desktop Bottom Promotion