உளுந்தே இல்லாமல் 10 நிமிடத்தில் மெதுவடை செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...

Posted By:

Instant Medu Vadai Recipe In Tamil: பண்டிகை நாட்களில் வீட்டில் வடை, பாயாசத்துடன் சமைத்து, ஒரு விருந்து சாப்பாடு சாப்பிடுவோம். அப்படி வடை செய்வதாக இருந்தால், பருப்புக்களை மணிக்கணக்கில் ஊற வைத்து செய்வோம். அதுவும் உளுந்து வடை அல்லது மெதுவடை செய்வதாக இருந்தால், உளுந்தை ஊற வைத்து, அதை பக்குவமாக அரைத்து வடையாக செய்வோம்.

ஆனால் இந்த மெதுவடையை உளுந்து ஊற வைக்காமலேயே செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு உளுந்து வடை பிடிக்குமானால், இனிமேல் அதை கஷ்டப்பட்டு செய்யாமல், வெறும் அரிசி மாவைக் கொண்டே செய்யலாம்.

Instant Medu Vadai How To Make A Medu Vada Without Urad Dal

உங்களுக்கு உளுந்து இல்லாமல் மெதுவடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து இல்லாமல் செய்யக்கூடிய மெதுவடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி மாவு - 1 கப்
* மோர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை எடுத்து, அதில் பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் மோரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் நீரை ஊற்றி, நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அந்த வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து, 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* மாவு சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* மாவு நன்கு வெந்து வரும் வரை நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். மாவு பதம் என்றால் கையில் நீரைத் தொட்டு மாவை எடுத்தால் மாவு கையில் ஒட்டாமல் இருக்கும்.
* மாவு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி விட வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அதையும் நன்கு கலந்து விட வேண்டும்.
* அடுத்து கையில் எண்ணெய் தடவி, மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி, லேசாக தட்டையாக தட்டி, நடுவே ஓட்டை போட்டு, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் மெது வடை போன்று தட்டி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான மெதுவடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 1, 2025, 14:16 [IST]
Desktop Bottom Promotion