காரசாரமான ஹைதராபாத் சிக்கன் கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தரமான டேஸ்ட்ல இருக்கும்

Posted By:

Hyderabadi Chicken Curry Recipe in Tamil: சண்டே வந்தாலே அது நான் வெஜ் சாப்பிடுவதற்கான நாள் என்றாகிவிட்டது. அசைவ உணவுகளில் அனைவருக்கும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன்தான். சிக்கன் சுவையானது என்பதை விட அது சமைப்பதற்கு மிகவும் எளிதானதும் கூட. அந்த வகையில் ஒரு சுவையான மற்றும் எளிதான சிக்கன்தான் ஹைதராபாத் சிக்கன் கறி. தனித்துவமான சுவையுடன் கூடிய காரமான சைடிஷ்களை விரும்புபவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த சிக்கன். இது தோசை, புரோட்டா, சப்பாத்திக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Hyderabadi Chicken Curry Recipe How to Make at Home in Tamil

ஹைதராபாத் உணவுகள் என்றாலே கொஞ்சம் காரசாரமாக சுருக்குனுதான் இருக்கும். இந்த சிக்கனும் அதற்கு விதிவிலக்கல்ல. தோசை, சப்பாத்தி, புரோட்டா போன்றவற்றுக்கு காரமான அதேசமயம் சுவையான கிரேவியை விரும்புபவர்கள் இதை அவசியம் முயற்சிக்க வேண்டும். இதை கிரேவியாகவும் சாப்பிடலாம் அல்லது நன்கு சுண்ட விட்டு ஸ்டார்ட்டராகவும் சாப்பிடலாம். வித்தியாசமான சிக்கன் சாப்பிட விரும்புபவர்களுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.

உங்களுக்கு காரசாரமான ஹைதராபாத் சிக்கன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் சிக்கன் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கிலோ சிக்கன்
- 2 ஸ்பூன் மிளகாய் தூள்
- ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 2 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- அலங்கரிக்க நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- அரை எலுமிச்சைப் பழத்தின் சாறு
- 3 ஸ்பூன் எண்ணெய்

மசாலா அரைக்க:

- 2 ஸ்பூன் மல்லித்தூள் (தனியா தூள்)
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 1/4 கப் நிலக்கடலை
- 1 ஸ்பூன் கசகசா
- 10 பூண்டு பல்
- 1 துண்டு இஞ்சி
- 5 கிராம்பு
- 1 அங்குல துண்டு இலவங்கப்பட்டை
- 2 ஏலக்காய்

செய்முறை:

- சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, கழுவி, அதிலுள்ள அதிகப்படியான நீரை வடித்துக்கொள்ளவும். அதனுடன் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். இதை குறைந்தது 30 நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும்.

- மசாலா அரைக்க தேவையானப் பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- இந்த விழுதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். மிக்ஸி ஜாரில் ஒட்டியிருக்கும் மசாலாவைச் சுத்தம் செய்ய, சுமார் அரை கப் தண்ணீர் ஊற்றி அலசி, அந்தத் தண்ணீரைத் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

- ஒரு பெரிய வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- அதனுடன் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து, அதிகத் தீயில் 3-4 நிமிடங்கள் வதக்கவும். பிறகு, வாணலியை மூடி வைக்கவும்.

- மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேகவிடவும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.

- 5 நிமிடங்களுக்குப் பிறகு, அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின், மிக்ஸியைக் கழுவிய மசாலா கலந்த நீரையும் ஊற்றி நன்றாகக் கிளறவும்.

- உப்பு மற்றும் காரத்தைச் சரிபார்த்து, தேவைக்கேற்பச் சரிசெய்து கொள்ளவும்.

- சிக்கன் மென்மையாகும் வரையிலும், குழம்பு கெட்டியாகி சிக்கன் மீது நன்கு ஒட்டிக்கொள்ளும் வரையிலும் தொடர்ந்து சமைக்கவும். இறுதியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

- நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி அலங்கரிக்கவும். இதனைச் சப்பாத்தி, தோசை அல்லது சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, November 28, 2026, 17:51 [IST]
Desktop Bottom Promotion