ஹோட்டல் ஸ்டைல் பச்சை பட்டாணி கிரேவி

Posted By:

இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பட்டாணியைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைல் பச்சை பட்டாணி கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம்.

முக்கியமாக இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். குறிப்பாக இந்த பட்டாணி கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். பேச்சுலர்களும் இந்த ரெசிபியை முயற்சிக்கலாம். உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் பச்சை பட்டாணி கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Hotel Style Green Peas Gravy Recipe In Tamil

கீழே ஹோட்டல் ஸ்டைல் பச்சை பட்டாணி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை பட்டாணி - 1 கப்

* பெரிய வெங்காயம் - 3 (அரைத்தது)

* தக்காளி - 2 (அரைத்தது)

* இஞ்சி - 1 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2

* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி - சிறிது

* முந்திரி - 6

* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

* பட்டை - 1/2 இன்ச்

* ஏலக்காய் - 2

* கிராம்பு - 2

* பிரியாணி இலை - 1

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் முந்திரியை வெதுவெதுப்பான நீரில் போட்டு, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் பட்டாணியை குக்கரில் போட்டு, அதில் சிறிது நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பட்டாணியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* முந்திரி நன்கு மென்மையாக ஊறியதும், அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் வெங்காய பேஸ்ட், அரைத்த தக்காளி ஆகியவற்றை சேர்த்து, பச்சை வாசனை போக ஒரு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, அடிப்பிடிக்காமல் இருக்க சிறிது நீரை ஊற்றி கிளற வேண்டும்.

* மசாலா அனைத்தும் நன்கு வெந்ததும், தேவையான அளவு நீரை ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கிளறி, வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து பிரட்டி, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* இறுதியாக அந்த கிரேவியில் சிறிது வெண்ணெய் மற்றும் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் பட்டாணி கிரேவி தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
Story first published: Thursday, March 23, 2023, 16:50 [IST]
Desktop Bottom Promotion