வெங்காயம் சேர்க்காத பூண்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Poondu Thakkali Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி செய்வீர்களா? இட்லிக்கு எப்போதுமே சட்னி தான் சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். அதுவும் சட்னியில் தக்காளி சட்னி தான் இன்னும் பிரமாதமாக இருக்கும். சொல்லப்போனால் பல வீடுகளில் இட்லிக்கு தக்காளி சட்னியை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் கணக்கில்லாமல் சாப்பிடுவதைக் காணலாம். இந்த தக்காளி சட்னியையே பல விதங்களில் செய்யலாம்.

Garlic Tomato Chutney How To Make Poondu Thakkali Chutney Recipe

பெரும்பாலும் தக்காளி சட்னியை செய்யும் போது, அதில் கட்டாயம் வெங்காயம் இருக்கும். ஆனால் இன்று நாம் பார்க்கப் போகும் தக்காளி சட்னிக்கு வெங்காயம் தேவையே இல்லை. பூண்டும், தக்காளியும் தான் இந்த சட்னியில் ஹீரோ. முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பூண்டு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 4 கொத்து
* பூண்டு - 1 கையளவு
* புளி - சிறிது
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 4 ஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* வரமிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 கையளவு பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது புளி மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி வெந்ததும், அதில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* அடுத்து அதில் காஷ்மீரி வரமிளகாய் மற்றும் வரமிளகாயை சேர்த்து வாணலியின் சூட்டில் சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பூண்டு தக்காளி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 18, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion