2 முட்டை இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. செம சூப்பரா இருக்கும்..

Posted By:

Egg Omelette Bajji Recipe In Tamil: குளிர்காலம் என்பதால் மாலை வேளையில் மிகவும் குளிராக இருக்கும். இந்நிலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியைப் போக்கும் வகையிலும், குளிருக்கு இதமாகவும் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் சற்று வித்தியாசமாக செய்து கொடுக்க விரும்புகிறீர்களா?

உங்கள் வீட்டில் 2 முட்டை இருந்தால், அதைக் கொண்டு நன்கு மொறுமொறுவென்றும் ருசியாகவும் பஜ்ஜி செய்து கொடுங்கள். குறிப்பாக வழக்கமாக செய்யும் முட்டை பஜ்ஜி போன்று செய்யாமல், முட்டையை ஆம்லெட் போன்று செய்து, பின் அதைக் கொண்டு பஜ்ஜி செய்து கொடுங்கள். இப்படி செய்யும் போது, அந்த பஜ்ஜி இன்னும் ருசியாக இருக்கும்.

Egg Bajji How To Make a Egg Omelette Bajji Recipe

உங்களுக்கு முட்டை ஆம்லெட் பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை ஆம்லெட் பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - 2 சிட்டிகை

பஜ்ஜி மாவிற்கு...

* கடலை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஆம்லெட் செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள முட்டை கலவையை குட்டி குட்டி ஆம்லெட்டுகளாக ஊற்றி, வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் பஜ்ஜி மாவிற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பெருங்காயத் தூள், ஆப்ப சோடா சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கட்டிகளின்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு முட்டை ஆம்லெட்டையும் எடுத்து, பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான முட்டை ஆம்லெட் பஜ்ஜி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 25, 2025, 18:00 [IST]
Desktop Bottom Promotion