அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Egg Aval Upma Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று புதுமையான சுவையில், அதே சமயம் சத்தான ஒரு காலை டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் உப்புமா செய்யுங்கள். அதுவும் ரவையைக் கொண்டு உப்புமா செய்யாமல், வீட்டில் அவலும், முட்டையும் இருந்தால், முட்டை அவல் உப்புமாவை செய்யுங்கள். இந்த உப்புமா வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, புரோட்டீன் நிறைந்த சத்தான உணவும் கூட. இந்த உப்புமாவை ஒருமுறை செய்தால், நிச்சயம் உங்களின் மெனுவில் இதுவும் இடம்பெறும்.

Egg Aval Upma How To Make Egg Poha Recipe

உங்களுக்கு இந்த முட்டை அவல் உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை அவல் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* முட்டை - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* அவல் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் அவலை நீரில் ஒருமுறை கழுவிவிட்டு, பின் அதில் நீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலை தூவி, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் ஊற வைத்த அவலை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான முட்டை அவல் உப்புமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 29, 2026, 7:11 [IST]
Desktop Bottom Promotion