2 கப் ஜவ்வரிசி இருந்தா.. தீபாவளிக்கு 10 நிமிஷத்துல ஸ்வீட், கார மிக்சர் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..

Posted By:

Diwali Special Sweet And Kara Mixture Recipe In Tamil: தீபாவளிக்கு உங்கள் வீட்டில் பலகாரங்களை செய்ய தொடங்கிவிட்டீர்களா? எப்போதும் போல முறுக்கு, குலாப் ஜாமூன் என்று தான் செய்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சற்று புதுமையான, அதே சமயம் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ஸ்வீட் மற்றும் கார மிக்சர் செய்து கொடுங்கள். இதற்கு 2 கப் ஜவ்வரிசி இருந்தால் போதும், 10 நிமிடத்தில் சட்டென்று செய்யலாம். முக்கியமாக இந்த பலகாரத்திற்கு பதம் பக்குவம் எதுவும் தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே அருமையாக செய்யலாம்.

Diwali Special Recipes How To Make Sweet And Kara Mixture At Home In 10 Minutes

உங்களுக்கு ஸ்வீட் மற்றும் கார மிக்சரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் மற்றும் கார மிக்சர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சர்க்கரை - 1/4 கப்
* ஏலக்காய் - 3
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* மாவு ஜவ்வரிசி - 2 கப்
* அவல் - 1 கப்
* பச்சை வேர்க்கடலை - 1 கப்
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு பெரிய வலைக்கரண்டியை அதன் மேல் வைத்து, மாவு ஜவ்வரிசியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரிய விட்டு, ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவு ஜவ்வரிசியையும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் வலைக்கரண்டியை வைத்து, அவலை சேர்த்து பொரிய விட்டு எடுத்து, ஜவ்வரிசியுடன் சேர்த்து, நன்கு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அதே எண்ணெயில் வலைக்கரண்டியை வைத்து, பச்சை வேர்க்கடலை சேர்த்து நன்கு பொரிய வைத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே எண்ணெயில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு இரண்டு பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, இரண்டிலும் பொரித்த ஜவ்வரிசி மற்றும் அவலை சம அளவில் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாதியை எடுத்து, அதில் பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை, பாதி வேர்க்கடலையை சேர்த்து நன்கு கிளறினால், ஸ்வீட் மிக்சர் தயார்.
* பின்பு மற்றொரு பாதியை எடுத்து, அதில் மீதமுள்ள வேர்க்கடலை, வறுத்த பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறினால், கார மிக்சர் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 5, 2026, 14:36 [IST]
Desktop Bottom Promotion