தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..

Posted By:

Diwali Special Bakery Style Thattai Recipe In Tamil: தீபாவளிக்கு பலவிதமான பலகாரங்களை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காரசாரமான பலகாரங்கள் தான் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் இந்த தீபாவளிக்கு தட்டையை செய்யுங்கள். அதுவும் பேக்கரி ஸ்டைல் தட்டையை செய்யுங்கள். இந்த தட்டை நன்கு மொறுமொறுவென்று இருக்கும். இந்த மொறுமொறுப்புடன் 1 மாதம் வரை வைத்து சாப்பிட வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள்.

Diwali Special Recipes How To Make Bakery Style Thattai

உங்களுக்கு பேக்கரி ஸ்டைல் தட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பேக்கரி ஸ்டைல் தட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* அரிசி மாவு - 3 1/2 கப் அல்லது 1/2 கிலோ
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* வேர்க்கடலை - 1/4 கப்
* கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* பாசிப்பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்(1/2 மணிநேரம் ஊற வைத்தது)

வேக வைப்பதற்கு..

* தண்ணீர் - 600-700 மிலி
* உப்பு - சுவைக்கேற்ப
* வரமிளகாய் - 15 (பொடித்தது)
* ஊற வைத்த பருப்புகள்
* அரைத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை
* அரிசி மாவு
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல் (இடித்தது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலையை எடுத்துக் கொண்டு, ஓரளவு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கடலைப் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை 1/2 மணிநேரம் நீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, அத்துடன் உப்பு, பொடித்த வரமிளகாய், ஊற வைத்த பருப்புக்களை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு தீயை குறைத்துவிட்டு, அதில் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொட்டுக்கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, அதில் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து மூடியைத் திறந்து, மாவை ஒரு அகலமான தட்டில் போட்டு, கைகளால் நன்கு இறுக்கமாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, குட்டி குட்டி பூரிகளாக தேய்த்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து, எண்ணெய் நன்கு சூடானதும், ஒரே தீயில் வைத்தவாறு தட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பேக்கரி ஸ்டைல் தட்டை தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 2, 2026, 22:42 [IST]
Desktop Bottom Promotion