1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும்

Posted By:

Chicken Potato Kurma Recipe in Tamil: சண்டே வந்தாலே சிக்கன் சாப்பிட வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. தற்போது புரட்டாசி மாதம் இருந்தாலும் அசைவம் சாப்பிடுபவர்கள் குறிப்பிட்ட அளவில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த வாரமும் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? வழக்கமான சிக்கன் செய்யாமல் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் சைடிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ரிச்சான உருளைக்கிழங்கு சிக்கன் குருமாவை செய்யுங்கள்.

Chicken Potato Kurma Recipe How to Make at Home in Tamil

இந்த ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு சிக்கன் குருமா சப்பாத்தி, பூரி மட்டுமின்றி புரோட்டா, பிரியாணி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதன் சுவை கிட்டதட்ட நீங்கள் தாபாவில் அல்லது ரெஸ்டாரெண்டில் சாப்பிடுவது போல இருக்கும். இந்த அட்டகாசமான குருமா செய்ய தனித்துவமான இரண்டு மசாலாவை அரைக்க வேண்டும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு சிக்கன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு சிக்கன் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா 1:

- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 2 பல் பூண்டு
- 1 இன்ச் நறுக்கிய இஞ்சி
- 6 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் மல்லி விதை
- 1 ஸ்பூன் மிளகு
- 3/4 கப் நறுக்கிய வெங்காயம்
- 3 நறுக்கிய தக்காளி
- 3/4 கப் தண்ணீர்

மசாலா 2:

- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 ஸ்பூன் சோம்பு
- 3 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 2 இன்ச் பட்டைத் துண்டு
- 1 ஸ்பூன் கசகசா
- 1/2 கப் துருவிய புதிய தேங்காய்
- அரை மணி நேரம் ஊறவைத்த 20 பாதாம் பருப்புகள்
- 3/4 கப் தண்ணீர்

குருமா செய்ய தேவையான பொருட்கள்:

- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- அரை கிலோ சிக்கன்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 2 கப் தண்ணீர்
- 3 நறுக்கிய உருளைக்கிழங்கு
- 1 எலுமிச்சை சாறு
- 3 கொத்து நறுக்கிய கொத்தமல்லி இலை

செய்முறை:

- ஒரு கடாயில் எண்ணெய், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மல்லி விதைகள் மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- அதனுடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது மென்மையாகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து, அவை நன்கு குழைந்து வரும் வரை மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.

- தக்காளி குழைந்ததும், வதக்கிய கலவையை கடாயிலிருந்து எடுத்து ஆறவைக்கவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.

- அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றவும். அதில் சோம்பு, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டை ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு சிறிது கசகசா, தேங்காய் மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- பாதாம் பருப்பை அரைப்பதற்கு எளிதாக இருக்க, சிறிது நேரம் ஊறவைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் ஒரு தட்டில் எடுத்து ஆறவைக்கவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.

- அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

- பிறகு நறுக்கிய சிக்கனைச் சேர்க்கவும். இந்த ரெசிபிக்கு சிக்கனின் தொடைப்பகுதி நன்றாக இருக்கும்.

- அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் முதல் மசாலாவை சேர்த்து கிளறவும். குழம்பின் பதத்திற்கு ஏற்பத் தண்ணீர் ஊற்றவும். வாணலியை மூடி வைத்து 15 நிமிடங்கள் சமைக்கவும்.

- அதன்பின் தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்குகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உருளைக்கிழங்கு மென்மையாகும் வரை மேலும் 15 நிமிடங்கள் சமைக்கவும்.

- பின்னர் இரண்டாவது மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். குருமாவை மிதமான தீயில் வைத்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

- இறுதியாக, எலுமிச்சைச் சாறு மற்றும் தாராளமாக மல்லித் தழைகளைத் தூவி குருமாவை இறக்கவும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 10, 2026, 22:10 [IST]
Desktop Bottom Promotion