நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும்

Posted By:

Cabbage Potato Sabzi Recipe in Tamil: சில காய்கறிகள் அனைவருக்குமே மிகவும் பிடித்தவையாக இருக்கும். அதில் முக்கியமானது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை பொரியல் செய்தாலும் சரி, குழம்பு வைத்தாலும் சரி வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு உருளைக்கிழங்கு அனைவரின் சமையலறையையும் ஆக்கிரமித்துள்ளது. சிக்கனைப் போலவே உருளைக்கிழங்கையும் பல வழிகளில் சமைக்கலாம்.

Cabbage Potato Sabzi Recipe How to Make at Home in Tamil

அப்படி இப்போது நாம் பார்க்கப்போவது உருளைக்கிழங்குடன் முட்டைக்கோஸை சேர்த்து நார்த் இந்தியன் ஸ்டைலில் தனித்துவமான உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபியைத்தான். இந்த நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி செய்வதற்கு மிகவும் எளிதானது. இது சாம்பார் சாதம். ரசம் சாதம் போன்றவற்றுக்கு மட்டுமின்றி சப்பாத்தி. ரொட்டிக்கும் அட்டகாசாக இருக்கும்.

உங்களுக்கு நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு சப்ஜியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 பெரிய வெங்காயம் (மெல்லியதாக நறுக்கியது)
- 1 பெரிய உருளைக்கிழங்கு (தோல் நீக்கி நறுக்கியது)
- 4 கப் முட்டைக்கோஸ் (மெல்லியதாக நறுக்கியது)
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் சீரகத் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
- தேவையான அளவு உப்பு
- ¼ கப் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

தாளிக்க:

- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 துண்டு பட்டை
- 1 பிரிஞ்சி இலை
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் சீரகம்

செய்முறை:

- முதலில் முட்டைக்கோஸை மெல்லியதாக நறுக்கவும், உருளைக்கிழங்கைச் சிறு துண்டுகளாக சதுர வடிவில் வெட்டவும், வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை மற்றும் பிரிஞ்சி இலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- பின்னர் சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து, அவை பொரியும் வரை காத்திருக்கவும். அதன்பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அவை மென்மையாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

- அதன்பின் இப்போது முட்டைக்கோஸ் மற்றும் உருளைக்கிழங்குடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- அனைத்தையும் நன்றாகக் கலந்த பிறகு, வாணலியை மூடி வைத்து, குறைந்த தீயில் சுமார் 10 நிமிடங்கள் சமைக்கவும். அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவும்.

- உருளைக்கிழங்கு நன்கு மென்மையாகும் வரை சமைக்கவும்.

- காய்கறிகள் வெந்து விட்ட பிறகு மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- மசாலாப் பொருட்கள் காய்கறிகள் மீது சீராகப் படியும் வகையில், அவற்றை மேலும் 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.

- இறுதியாக, ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய கொத்தமல்லித் தழையைச் சேர்த்து ஒருமுறை நன்றாகக் கிளறவும்.

- அவ்வளவுதான் சுவையான நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெடி.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 6, 2026, 18:35 [IST]
Desktop Bottom Promotion