1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்

Posted By:

Andhra Style Onion Thokku Recipe in Tamil: பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி அல்லது சாம்பார் போன்றவற்றைத்தான் அனைத்து வீடுகளிலும் செய்வார்கள். எதுவுமே இல்லாத சமயத்தில் இட்லி பொடி கூட வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் எந்த வீட்டிலும் இட்லி, தோசைக்கு தொக்கு செய்ய மாட்டார்கள். ஏனெனில் தொக்கு என்றாலே பொதுவாக அது சாதத்துடன் சாப்பிட மட்டும்தான் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் நமக்குள் வந்துவிட்டது.

Andhra Style Onion Thokku Recipe How to Make at Home in Tamil

உண்மையில் இட்லி, தோசைக்கு தொக்கு வகைகள் அட்டகாசமாக இருக்கும். அதிலும் நாம் இப்போது பார்க்கப்போகும் ஆந்திரா ஸ்டைல் வெங்காய தொக்கு அட்டகாசமான சைடிஷாக இருக்கும். இந்த வெங்காய தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த வெங்காய தொக்கு செய்வதற்கு மிகவும் எளிதானது, மேலும் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கக்கூடியது.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் வெங்காய தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் வெங்காய தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வெங்காயத்தை வதக்க:

- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/4 ஸ்பூன் கடுகு
- கால் கிலோ சின்ன வெங்காயம்
- சிறிதளவு புளி

தொக்கு செய்ய:

- 4 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- தேவையான உப்பு
- 1/2 ஸ்பூன் பெருங்காயம்
- 1/2 ஸ்பூன் வெல்லம்

செய்முறை:

- முதலில் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும்.

- எண்ணெய் சூடானதும், கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து அவை வெடிக்கும் வரை விடவும்.

- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, அது கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை நன்றாக வதக்கவும்.

- அதன்பின் புளியைச் சேர்த்து, மிதமான தீயில் 2 நிமிடங்கள் நன்றாகக் கலக்கவும்.

- இதை நன்றாக ஆறவிடவும், பிறகு, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்

- பின்னர் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.

- அடுப்பை மிதமான தீயில் வைத்து, பெருங்காயம் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- பின்னர் வெல்லத்தை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

- வெல்லம் கரைந்ததும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

- தொக்கு ஒன்று சேர்ந்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்.

- அடுப்பை அணைத்துவிட்டு, முழுமையாக ஆறவிடவும்.

- இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 28, 2026, 21:48 [IST]
Desktop Bottom Promotion