Thiruparankundram: அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படக் கூடாது.. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதிகள்

By Rajkumar R

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு, பொது அமைதியை காரணம் காட்டி தீபம் ஏற்ற தடை விதிக்க முடியாது எனவும், அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறி அதற்கு அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து ஐஎஸ்எப் வீரர்கள் உதவியோடு மனுதாரர் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


Thiruparankundram tn Government High Court

திருப்பரங்குன்றம் தீபம்

தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்த வழக்கை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீண்டும் விசாரிப்பார் என உத்தரவிட்டார்கள். இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி கார்த்திகை தீபத்தை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்.. ஆனா பொதுமக்களுக்கு அனுமதி இல்ல! உயர் நீதிமன்றம் சொன்னது என்ன?

தீப தூணில் தீபம்

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை, மதுரை மாநகர காவல்துறை, மதுரை மாவட்ட நிர்வாகம், தர்கா தரப்பு வாதிட்டது.

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றலாம்.. தமிழக அரசின் மனு தள்ளுபடி..நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக அரசு மேல்முறையீடு

மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் இந்து முன்னணி தரப்பில் எதிர்வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று தங்கள் உத்தரவை வழங்கியுள்ளனர். அதில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என கூறியுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளை உறுதி செய்துள்ளனர். அதே நேரத்தில் தனி நீதிபதியின் உத்தரவில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

தீபத்தூணில் தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்க கூடாது. யார் யாரை அனுமதிக்கலாம் என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை ஆகியவை முடிவெடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பொது அமைதிக்கு பிரச்சனை ஏற்படும் என அரசு காரணம் காட்டுவது ஏற்கத்தக்கது அல்ல என தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள் அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்.

Credit: Oneindia

Desktop Bottom Promotion