300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கம்பெனி எது தெரியுமா? டாடாவோ, ரிலையன்ஸோ இல்லையாம்

இந்தியா பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் நிறைந்த நாடாகும். இந்தியாவைச் சேர்ந்த அம்பானி, அதானி மற்றும் டாடா குழுமங்கள் இந்தியா மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய முன்னணி நிறுவனங்களாக உள்ளன. ஆனால் இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனம் அல்லது வணிகக் குழு எது என்று யாராவது கேட்டால், பெரும்பாலான மக்கள் டாடா (Tata) அல்லது கோத்ரெஜ் (Godrej) நிறுவனங்கள் என்று கூறுவார்கள், ஆனால் அது முற்றிலும் தவறான பதிலாகும்.

Which Is the Oldest Company of India

ஏனெனில் இந்தியாவில் கிட்டதட்ட 290 ஆண்டுகளாக இருக்கும் இந்த நிறுவனத்தைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால் இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களை நாம் தினமும் பயன்படுத்துகிறோம். பிஸ்கட் முதல் விமானங்கள் வரை பல்வேறு துறைகளில் இந்த வணிகக் குழு தனது ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது. அந்த நிறுவனம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் பழமையான நிறுவனம்

இந்தியாவில் டாடா, பிர்லா மற்றும் கோயன்கா போன்ற புகழ்பெற்ற வணிகக் குழுக்களும், அம்பானி, அதானி, நாடார் மற்றும் பிரேம்ஜி போன்ற நவீன கால பெரும் வணிகக் குழுக்களும் உள்ளன. ஆனால் 1736-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'வாடியா குழுமம்' (Wadia Group), இன்றும் செயல்பாட்டில் இருக்கும் இந்தியாவின் மிகப்பழமையான வணிகக் குழுவாகத் திகழ்கிறது. வாடியா குழுமம் 290 ஆண்டுகளாகத் தனது வணிகச் செயல்பாடுகளை வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகிறது.

வாடியா குழுமம்

1736-ல் நிறுவப்பட்ட வாடியா குழுமம் ஜவுளி, விமானப் போக்குவரத்து மற்றும் உணவு போன்ற துறைகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளது. வாடியா குழுமத்தின் கீழ் உள்ள குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (Britannia Industries) மற்றும் பாம்பே டையிங் (Bombay Dyeing) ஆகியவை அடங்கும். இதில் பிரிட்டானியா இந்திய உணவுச் சந்தையில் ஒரு முக்கிய நிறுவனமாகவும், பாம்பே டையிங் ஜவுளித் துறையில் பிரபலமான நிறுவனமாகவும் விளங்குகிறது.

வாடியா குழுமத்தின் நிறுவனர் யார்?

இந்தியாவின் தொழில் துறைக்கும், குஜராத்திற்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. குஜராத்தின் சூரத் நகரில் 1702-ஆம் ஆண்டு பிறந்த லோவ்ஜி நுஸர்வன்ஜி வாடியா, கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல்துறை கட்டுமானத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்றார். இந்நிறுவனம் மொத்தம் 355 கப்பல்களைக் கட்டியது. லோவ்ஜியும் அவரது சகோதரர் சொராப்ஜியும் இணைந்து இந்தியாவின் முதல் கப்பல்துறையை உருவாக்கினர். இது 1840-ஆம் ஆண்டிற்குள் மிகப்பெரிய நிறுவனமாக உருமாறியது. 1863-ஆம் ஆண்டில், வாடியா குழுமம் இந்தியாவின் முதல் வணிக நிறுவனமான 'தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்' (The Bombay Burmah Trading Corporation Limited) நிறுவனத்தை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து, 1879-இல் 'பாம்பே டையிங்' (Bombay Dyeing) நிறுவனத்தையும், 1918-இல் 'பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்' (Britannia Industries) நிறுவனத்தையும் இக்குழுமம் உருவாக்கியது.

வாடியா குழுமத்தின் மதிப்பு

சுமார் 60,000 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பைக் கொண்டுள்ள வாடியா குழுமம், இந்திய தொழில் துறையில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது. 290 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இந்தக் குழுமம், தனது பாரம்பரியத்தைக் பாதுகாப்பது மட்டுமின்றி, மீளுருவாக்கம் மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கான புதிய செயல்முறைகளையும் உருவாக்கியுள்ளது. ஐபிஎல் (IPL) தொடரில் பங்கேற்கும் 'கிங்ஸ் லெவன் பஞ்சாப்' அணியும் வாடியா குழுமத்திற்குச் சொந்தமானதே.

இந்த நிறுவனத்தை இப்போது நடத்துவது யார்?

முதலில் கப்பல் கட்டும் நிறுவனமாக, லோவ்ஜி நுஸர்வன்ஜி வாடியாவால் நிறுவப்பட்ட 'வாடியா குழுமம்' (Wadia Group), தற்போது நுஸ்லி வாடியாவின் தலைமையில் இயங்கி வருகிறது. பிப்ரவரி 15, 1944 அன்று பிறந்த நுஸ்லி வாடியா, நெவில் வாடியா மற்றும் தீனா வாடியா ஆகியோரின் மகன் ஆவார். தீனா வாடியா, பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் மகள் ஆவார். நுஸ்லி வாடியாவிற்கு நெஸ் வாடியா மற்றும் ஜஹாங்கீர் வாடியா என இரு மகன்கள் உள்ளனர். அவர்கள் தற்போது வணிகத்தை நிர்வகித்து வருகின்றனர். வாடியா குடும்பத்தினர் பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

Story first published: Thursday, November 19, 2026, 14:59 [IST]
Desktop Bottom Promotion